கலிபோர்னியாவில் இருக்கும் ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, நாம் அன்றாடம் செய்யும் சில பொதுவான பழக்கங்கள் குடலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதை எச்சரிக்கிறார். இவை நம்மால் கவனிக்கப்படாமல் குடலின் நுண் இயக்கங்களை மெதுவாக பாதிக்கும் என்பதுதான் கவலையளிக்கும் செய்தி.
நம்மில் பலர் நள்ளிரவில் ஜங்க் ஃபூட் சாப்பிடும் பழக்கத்தில் இருப்பது அல்லது அதை தூண்டும் வலைப்பதிவுகளை பின்பற்றுவது குடலுக்கு தீங்கு செய்கிறது. அதேசமயம் செயற்கை நச்சு நீக்கும் பானங்கள் போன்றவை உண்மையில் நன்மையை விட சேதத்தையே அதிகமாகச் செய்யும்.

வாழ்க்கையின் வேகமயமான பாணிக்கு ஏற்ப, நாம் மிக வேகமாக சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துவிட்டோம். உணவை மெதுவாக மெல்லாமல் விழுங்குவது, வயிற்றில் அதிக அழுத்தம் ஏற்படுத்தி செரிமான கோளாறுகளை உருவாக்குகிறது. எனவே சாப்பாட்டிற்கு குறைந்தது 20 நிமிடங்கள் செலவிட வேண்டும்.
செயற்கை இனிப்புகள் மிகப் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சுக்ரலோஸ் மற்றும் அஸ்பார்டேம் போன்றவை குடலின் நுண்ணுயிரிகளை மாற்றி வீக்கம், செரிமான பிரச்சனை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். இயற்கை இனிப்புகளைத் தேர்வு செய்வது நல்லது.
சிலர் ஒரு நேர உணவை தவிர்த்து, பின்னர் இரவில் மிகவும் அதிகமாக சாப்பிடும் பழக்கத்தில் உள்ளனர். இது இன்சுலின் அளவை பாதித்து, குடலில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது எடையைக் கூட அதிகரிக்கச் செய்யும். தினசரி சமச்சீரான நேரத்தில் சாப்பிட பழக்கமாவதே பாதுகாப்பானது.
தூக்கம் குறைவாக இருப்பது உடலை மட்டுமல்ல, குடலையும் பாதிக்கிறது. தூக்கம் என்பது குடல் ஓய்வெடுக்கும் நேரம். அது குறையும்போது, குடல் சுவர் பாதிக்கப்படுகிறது. குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம்.
நம்மில் பலர் வலி நிவாரணிகளை அடிக்கடி எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இவை (NSAIDs) குடல் சுவரை பாதித்து, புண்கள் மற்றும் இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். எனவே அவற்றை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தால், குடல் சுகநிலை மெதுவாக சீரழியும் அபாயம் உள்ளது. இப்பழக்கங்களை சீர்செய்யும் முயற்சி குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.