கல்லீரல் மனித உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். உணவை ஆற்றலாக மாற்றுதல், இரத்தத்தில் நச்சுகளை நீக்குதல், ஹார்மோன்களை கட்டுப்படுத்துதல் போன்ற 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை தினசரி மேற்கொள்கிறது. ஆயுர்வேத சப்ளிமெண்ட்கள் இயற்கை மற்றும் பாதுகாப்பானவை எனப் பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால், மருத்தவர்கள் எச்சரிக்கின்றனர், சில நேரங்களில் இவை கல்லீரலை மெதுவாக சேதப்படுத்தி, கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கலாம்.

சமீபத்தில், டாக்டர் மன்சாஃபா பெபாரி தனது தந்தை அனுபவத்தை பகிர்ந்தார். அவரது தந்தை மது அருந்தாதவர், நீரிழிவு அல்லது முன் கல்லீரல் பிரச்சினை இல்லாதவர். ஆனால், சிறுநீர் பிரச்சனை மற்றும் புரோஸ்டேட் விரிவாக்கத்திற்கான பரிசோதனையில், அவருக்கு சிரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து எடுத்த ஆயுர்வேத டானிக் மற்றும் மூலிகை மாத்திரைகள் இதற்குக் காரணமாக இருந்தன.
அஸ்வகந்தா, கற்றாழை, குகுல், கோட்டு கோலா, மஞ்சள் போன்ற பிரபல மூலிகைகள் கூட ஹெபடைடிஸ் மற்றும் கடுமையான கல்லீரல் செயலிழப்புடன் தொடர்புடையதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. “இயற்கை” என்ற பெயரில் விற்கப்படும் மூலிகை மருந்துகள் முழுமையாக FDA போன்ற கட்டுப்பாட்டு அமைப்பால் சோதிக்கப்படவில்லை, சிலவற்றில் ஆர்சனிக், பாதரசம் போன்ற கன உலோகங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்: ஆயுர்வேத சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்ளும் முன், உரிமம் பெற்ற தயாரிப்புகளை மட்டும் வாங்கவும், பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை பின்பற்றவும், உங்கள் மருத்துவரைத் தகவல்படுத்தவும். இயற்கை என்றால் பாதுகாப்பு என்று அர்த்தமில்லை; கல்லீரலை பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் எப்போதும் இருப்பதால், எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.