வேர்க்கடலை தினமும் அளவாக சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, மூளை பாதுகாப்பு போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என்று உணவியல் நிபுணர் கனிக்கா மல்ஹோத்ரா கூறியுள்ளார். வேர்க்கடலை வறுத்தாலும், வேகவைத்தாலும், பச்சையாக சாப்பிட்டாலும் அதன் ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும். தொடர்ந்து சிறிதளவு வேர்க்கடலை சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் HDL (நல்ல) கொழுப்பை அதிகரித்து LDL (கெட்ட) கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது. அதே நேரம், அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் கொண்டது காரணமாக இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.

மேலும், வேர்க்கடலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை திசுக்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும் மற்றும் அறிவாற்றல் சிதைவின் வாய்ப்பை குறைக்கும் பண்பையும் கொண்டுள்ளது. இதர முக்கிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை பல உடல் செயல்முறைகளை ஆதரிக்கின்றன.
எனினும், அளவுக்கு மிஞ்சினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும். அதிகப்படியான வேர்க்கடலை உட்கொள்வது எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். ஒவ்வாமை கொண்ட நபர்கள், சிலருக்கு செரிமான கோளாறுகள் அல்லது மருந்துகளுடன் தொடர்பு காரணமாக பிரச்சனை ஏற்படலாம். பச்சை, வறுத்த அல்லது உப்பு சேர்த்த வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மைகள் சிறிது மாறலாம், ஆனால் மொத்தத்தில் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாகவே இருக்கும்.