உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பிறகு நீட்சி பயிற்சி செய்வது உடல் செயல்திறனை மேம்படுத்துவதோடு, காயங்களைத் தடுக்கும் முக்கிய நடைமுறையாகும். எடை பயிற்சி, யோகா, பைலேட்ஸ், ஏரோபிக்ஸ் போன்ற எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்யும் முன், தசைகள் மற்றும் மூட்டுகளை தயார்படுத்த நீட்சி பயிற்சி அவசியமாகும். இதன் மூலம் தசைகளின் சுருக்கமும் இறுக்கமும் குறைந்து, நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கின்றது.

நீட்சி பயிற்சி இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது. டைனமிக் ஸ்ட்ரெச்சிங் என்பது உடற்பயிற்சிக்கு முன் செய்யப்படும் பயிற்சியாகும்; இது தசைகளை சூடாக்கி, உடலை தயார்படுத்துகிறது. ஸ்டாடிக் ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சிக்கு பிறகு தசைகளை தளர்த்துவதற்கும், வலியை குறைக்கவும், நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.
உடற்பயிற்சிக்கு முன் நீட்சி பயிற்சி செய்வதன் மூலம் வலிமை, வேகம், சகிப்புத்தன்மை அதிகரித்து, காயப்படுவதற்கான அபாயம் குறைகிறது. மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தும் இதனால் உடற்பயிற்சியின் போது ஏற்படும் விறைப்பையும் குறைக்க முடிகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு நீட்சி பயிற்சி தசை மீட்பை ஊக்குவித்து, லாக்டிக் ஆசிட் அளவை குறைக்கிறது, இதனால் தசை வலி மற்றும் பதற்றம் குறைகிறது.
நீட்சி பயிற்சியை அன்றாட வழக்கமாக்கி முக்கிய தசைகள் மற்றும் மூட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சிக்கு முன் லெக் ஸ்விங்ஸ், ஆர்ம் சர்கிள், தொர்சோ டிவிஸ்ட் போன்ற டைனமிக் பயிற்சிகளை செய்ய வேண்டும். பயிற்சியின் போது வலிமை, நெகிழ்வு ஆகியவற்றை அதிகரித்து, காயங்களைத் தடுக்கும் வகையில் உடலை தயார் செய்ய முடியும்.