சென்னை: துளசி இனத்தைச் சேர்ந்த திருநீற்று பச்சிலை ஒரு தெய்வீக மூலிகை. வெண்மை நிறத்தில் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்யும் இந்தச் செடி இருக்கும் இடங்களை நாடி தேனீக்கள் ஓடிவரும்.
நீண்ட காலம் பூக்காத தாவரங்களின் அருகில் இரண்டு திருநீற்றுப் பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடந்து, விரைவில் பூக்கள் பூக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மூலிகை இந்தியா, இலங்கை நாடுகளில் அதிகளவு வளர்கிறது.
இந்த இலையை கசக்கி முகர்ந்தாலே தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும். வாந்திகளுக்கு இது கைகண்ட மருந்து. குறிப்பாக, ரத்தவாந்திக்கு மிகவும் பயன்தரக்கூடியது. இதற்கு, உருத்திரசடை, பச்சை சப்ஜா என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.
பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.
இனிப்புச் சுவையுடைய இதன் விதைகள், ‘சப்ஜா’ விதைகள் என்று பரவலாக அழைக்கப்படுகின்றன. இதன் விதைகளைச் சுமார் இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து சுவைமிக்க மருத்துவ பானத்தைத் தயாரிக்கலாம். வயிற்று வலி, கண் எரிச்சல், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்போது, பனங்கற்கண்டு சேர்த்து சப்ஜா பானத்தைப் பருக, சுவையோடு விரைந்த நிவாரணமும் கிடைக்கும். மலத்தை வெளித்தள்ளும் செய்கை இந்தப் பானத்தின் ‘அசையும் சொத்து!’
இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது. இன்னும் பல நோய்களுக்கும் திருநீற்றுப் பச்சிலையில் தீர்வு காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்.