முட்டை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு ஆகும். இதய ஆரோக்கியம், சிறந்த பார்வை திறன், தசை வலிமை மற்றும் நீடித்த ஆற்றல் போன்ற பல நன்மைகளை வழங்கும். நாளின் எந்த நேரத்திலும் முட்டையை சாப்பிடலாம், ஆனால் சில நேரங்களில் அதன் பயன் அதிகமாகும். காலையில் அல்லது உடற்பயிற்சி பிறகு இரவில் சாப்பிடுவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு முழு முட்டையில் சுமார் 75 கலோரிகள், 6 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு, கொலஸ்ட்ரால், வைட்டமின் A, B5, B12, ரிபோஃப்ளாவின் மற்றும் செலினியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. முட்டையில் உள்ள ‘நல்ல’ கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண் சிதைவைக் குறைக்க உதவுகின்றன.

முட்டையில் உள்ள புரதம் தசைகளை பராமரிக்கவும், சரிசெய்யவும் உதவுகிறது. குறைந்த கலோரிகள் மற்றும் அதிக புரதச்சத்து காரணமாக, இது எடை கட்டுப்பாட்டிற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. காலையில் முட்டைகளை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசியின்றி இருக்க முடியும், மதிய உணவுக்கு முன் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை தவிர்க்க உதவும்.
இரவில் முட்டை சாப்பிடுவது உடலுக்கு மேலும் நன்மைகளை தருகிறது. மாலையில் உடற்பயிற்சி செய்த பிறகு முட்டை உட்கொள்வது தசைகளின் மீட்பு மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்களை வழங்குகிறது. முட்டையில் டிரிப்டோபான் அமினோ அமிலம் செரோட்டோனின் மூலம் மெலடோனினை உருவாக்குகிறது, இது தூக்கத்தை மேம்படுத்தும். இந்த காரணங்களுக்காக, முட்டை எந்த நேரத்திலும் ஆரோக்கியமான சூப்பர் ஃபுட் ஆகும்.