காங்கேயம் அருகே வெள்ளக்கோவிலில் பள்ளி வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரின் தன்னலம் இல்லாத செயலால் 20 குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் அந்த ஓட்டுநரின் உயிர் பறிபோன நிலையில், இது போன்ற திடீர் மாரடைப்பு ஏற்படக் காரணம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் முதல் காங்கேயம் அருகே பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட ஓட்டுநர் வரை 50 வயதுக்குள் மாரடைப்பால் பறிபோன உயிர்கள் ஏராளம்.
முன்பெல்லாம் வயதானவர்கள், மன அழுத்தம் அதிகம் தரும் வேலை செய்வோர் அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்தவர்கள் தான் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பார்கள் என்ற கருத்து இருந்து வந்தது. ஆனால் தற்போது 50 வயதுக்குள்ளாகவே சாமானியர்கள் பலரும் நெஞ்சுவலியால் இறப்பது அதிகரித்துள்ளது. ஒரு சிலர் 30 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
கொரோனாவின் தாக்கத்துக்கு பின்பே இதுபோன்ற இளம் வயது மாரடைப்பு மரணங்கள் நடப்பதாக கூறப்பட்டாலும், மரபணு மாற்றங்களை முக்கிய காரணமாக கூறுகிறார்கள் மருத்துவர்கள். இருதய அடைப்பு வேறு, மாரடைப்பு வேறு என்று இருதய மருத்துவர் முரளிதரன் தெரிவித்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டவர்களை முதலுதவி மூலமாக உடனடியாக காப்பாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மட்டுமே, மாரடைப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழி என்றும் கூறுகிறார் மருத்துவர் முரளிதரன். “நோய் நாடி நோய் முதல்நாடி” என்ற வள்ளுவனின் குறளுக்கு ஏற்ப, இந்த வயதுக்குதான் இந்த வியாதிகள் வரும் என்று அலட்சியம் காட்டாமல் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.