உடல்நலம் குறித்து பலரும் தவறான நம்பிக்கைகளில் வாழ்கிறார்கள். குறிப்பாக அரிசி எடை அதிகரிக்கும், காஃபி எப்போதும் நல்லது போன்ற கருத்துகள் பரவலாக உள்ளன. ஆனால் ஸ்டான்ஃபோர்டு மற்றும் ஹார்வர்டில் பயிற்சி பெற்ற குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேதி, இத்தகைய உணவுகள் எவ்வாறு உண்மையில் செயல்படுகின்றன என்பதை அறிவியல் ரீதியாக விளக்குகிறார். அவர் கூறுவதாவது, சில உணவுகள் நம் குடலுக்கு மிக முக்கியமானவை, அவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்கிறோம் என்பதே அவற்றின் நன்மையை நிர்ணயிக்கிறது.

வாழைப்பழம் சற்றே பச்சையாக இருக்கும் போது சாப்பிடுவது சிறந்தது. அவற்றில் உள்ள ரெசிஸ்டென்ட் ஸ்டார்ச் ரத்த சர்க்கரையை உயர்த்தாமல் குடலில் நல்ல பாக்டீரியாவை வளர்க்கிறது. ஆனால் அதிகம் பழுத்த வாழைப்பழம் சர்க்கரை அளவை அதிகரிக்கும். காஃபி குடலின் இயக்கத்தை சீராக்க உதவினாலும், அதிகமாக குடிப்பது அல்லது வெறும் வயிற்றில் குடிப்பது அசிடிட்டி மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும். மசாலாப் பொருட்கள் சுவைக்காக மட்டுமின்றி அழற்சி எதிர்ப்பு சக்தியுடன் குடல் புறணியை பாதுகாக்கின்றன.
வெள்ளை அரிசி பெரும்பாலும் குற்றவாளியாகக் கருதப்படுகின்றது, ஆனால் சமைத்து குளிரவைத்து உண்ணும் போது அதில் உருவாகும் ரெசிஸ்டென்ட் ஸ்டார்ச் குடலுக்கு நன்மை பயக்கும். அதேபோல் பெர்ரி வகை பழங்கள் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை குறைத்து ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை வளர்க்கின்றன. ப்ரோபயாடிக் பானங்களை விட பிளெயின் யோகர்ட் மற்றும் இயற்கையாக புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் சிறந்த தேர்வு. சீட்ஸ் வகைகள் அதிக நார்ச்சத்து வழங்கி செரிமானத்தை சீராக வைக்கின்றன.
இந்த உணவுகளுடன் வாழ்க்கை முறையும் முக்கியம் என டாக்டர் சௌரப் நினைவூட்டுகிறார். அவசர அவசரமாக சாப்பிடுதல், மனஅழுத்தம், தூக்கமின்மை ஆகியவை குடல் பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைக்கும். எனவே சீரான உணவு, நல்ல தூக்கம் மற்றும் சீரான பழக்கவழக்கங்கள் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய விசையாகும்.