தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் அற்புதமான தருணம். கர்ப்பம் தரித்த உடன் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கர்ப்ப காலத்தில், குழந்தையை உருவாக்கும் போது தாயின் உடல் அற்புதமான ஆற்றலைப் பெறுகிறது. இந்த நேரத்தில் ஆரோக்கியமாக இருப்பதும் மற்றும் ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்வதும் மிகவும் முக்கியமானது. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான் பிரசவம் சீராக நடைபெறும். கர்ப்ப காலத்தில் தாயின் எடை அதிகரிப்பு மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது.

கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது இயல்பானது. ஆனால் இது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கர்ப்பத்திற்கு முந்தைய உடல் எடை, ஆரோக்கியம் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவை எடையை பாதிக்கின்றன. குழந்தையை சுமக்கும் பெண் 11-15 கிலோ எடை அதிகரிப்பது வழக்கமாகும். அதாவது மாதத்திற்கு சராசரியாக 0.5-2 கிலோ எடை அதிகரிக்கும். கர்ப்பத்திற்கு முன் எடை குறைவாக இருக்கும் பெண்கள் 12-18 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். மாறாக, அதிக எடை கொண்ட பெண்கள் 5-9 கிலோ மட்டுமே அதிகரிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் இரண்டு மடங்கு உணவு சாப்பிட வேண்டும் என்பது தவறான எண்ணம். கூடுதல் கலோரிகள் தேவை என்பது உண்மை, ஆனால் அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியமில்லை. முதல் மூன்று மாதங்களில் கூடுதல் கலோரிகள் தேவையில்லை. ஏனென்றால் உடலானது ஏற்கனவே உள்ள ஆற்றலை பயன்படுத்துகிறது. அடுத்த மூன்று மாதங்களில் ஒரு நாளுக்கு 300-350 கலோரிகள் அதிகமாக தேவைப்படுகிறது. இறுதிப் பகுதியில் 450-500 கலோரிகள் தேவைப்படும்.
உதாரணமாக, ஒரு கிளாஸ் பால், ஒரு ஆப்பிள் மற்றும் சில பாதாம் போதுமானது. இதில் இருந்து கூடுதல் கலோரிகள் கிடைக்கும். கர்ப்ப காலத்தில் புரதச் சத்து மிகவும் அவசியம். குழந்தையின் வளர்ச்சிக்கு தாயின் ஆரோக்கியமே அடிப்படையாக இருக்கும். 3 முதல் 6 மாதங்களுக்குள் புரதத் தேவை 10 கிராமாகவும், 6 முதல் 9 மாதங்களுக்குள் 20 கிராமாகவும் அதிகரிக்கிறது. பருப்பு வகைகள், முட்டை, மீன் மற்றும் பால் பொருட்கள் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவும்.
கீரைகள், பழங்கள், பீன்ஸ் போன்றவை இரும்புச்சத்து அளிக்கின்றன. இரும்புச்சத்து குறைபாட்டை போக்க, உலர் பழங்கள் மற்றும் இறைச்சியை சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடலானது இரும்புச்சத்தை நன்றாக உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. எனவே எலுமிச்சை, கொய்யா போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். பாலில் இருந்து கால்சியம் கிடைக்கும்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது சிசேரியன் பிரசவத்திற்கும் வழிவகுக்கும். குழந்தையின் எடை குறையக்கூடும். தினசரி 400 மைக்ரோகிராம் ஃபோலிக் ஆசிட் மற்றும் 60 மில்லிகிராம் இரும்புச்சத்து உட்கொள்வது அவசியம். அயோடின் தேவைக்கு அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தலாம்.
சமச்சீரான உணவு மற்றும் லேசான உடற்பயிற்சி மூலம் கர்ப்ப காலத்தில் எடையை கட்டுப்படுத்தலாம். மேலும் என்ன உணவு எடுத்துக் கொள்வது என்பதற்காக மகளிர் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள், தயிர், நெய் ஆகியவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இயற்கை உணவுகளைச் சேர்த்து, செயற்கை பொருட்களை தவிர்ப்பது நல்லது. நீர் குடிப்பது மிகவும் அவசியம். அதிகப்படியான உப்பை குறைத்து, சர்க்கரைச் சேர்க்கையை கட்டுப்படுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் மனநலத்தையும் பராமரிக்க வேண்டும். தியானம், யோகா போன்றவை மனஅழுத்தத்தைக் குறைக்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுப் பழக்கம் மூலம் கர்ப்ப காலத்தையும் குழந்தையின் வளர்ச்சியையும் பாதுகாக்க முடியும்.