வெப்பம் அதிகம் இருக்கும் சூழல் ஆண்களின் கருவுறுதலுக்கு எதிரான ஒரு முக்கியமான பாதிப்பாக அமைகிறது. பலர் கவனிக்காமல் போகும் இந்த விளைவுகள், விந்தணுக்களின் இயக்கம் மற்றும் தரத்தில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. விந்தணுக்கள் சிறப்பாக செயல்படுவதற்கு அவை உடல் வெப்பநிலையை விட 2-3°C குறைவான சூழல் தேவைப்படுகிறது. அதனால் அதிக வெப்பம், ஹாட் டப்ஸ், இறுக்கமான ஆடைகள் மற்றும் வெப்பநிலை மிகுந்த பணியிடங்களில் அதிக நேரம் கழிப்பது, விந்தணுக்களின் இயக்கம் மற்றும் டிஎன்ஏ தரத்தில் குறைபாடுகளை உருவாக்குகிறது.

டாக்டர் பிரசாந்த் குமார் நாயக் கூறும்படி, வெப்பம் அதிகரிக்கும் கோடை சீசனில், விந்தணுக்களின் இயக்கமும் உயிர்த் தன்மையும் குறையும். குறிப்பாக வெப்பநிலை 1°C அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தியில் சுமார் 14% வீழ்ச்சி ஏற்படுகிறது. எனவே கோடை பருவத்தில் விந்தணு ஆரோக்கியத்தை பாதுகாக்க விழிப்புணர்வுடன் வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வது அவசியம்.
இதற்காக பருத்தி மற்றும் லினன் போன்ற காற்றோட்டமுள்ள ஆடைகளை அணிவது முக்கியம். இது வெப்பத்தை வெளியேற்றுவதற்கும், உடல் குளிர்ச்சியாக இருக்கவும் உதவுகிறது. மேலும், உடல் டிஹைட்ரேட் ஆகாமல் இருக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். இது உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான விந்து திரவத்தை பராமரிக்க உதவுகிறது.
குளிர்ந்த நீரில் குளிப்பது கூடுதல் வெப்பத்தை குறைக்கும் ஒரு எளிய வழி. வெளிப்புற நடவடிக்கைகளுக்குப் பிறகு இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. வீட்டில் ஃபேன்கள் அல்லது மிதமான ஏர் கண்டிஷனர்களின் உதவியுடன் வெப்பத்தை குறைத்துக்கொள்ளலாம். வெப்பநிலை மிகக் குறைவாக இருந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோடையில் நேரடி சூரிய ஒளியில் இருக்கும்போது, வைட்டமின் டி உற்பத்தி அதிகரிக்கிறது. இது விந்தணு இயக்கம், தரம் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்த உதவுகிறது. காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் குறைந்த நேரம் வெளியே இருப்பது இந்த நன்மையை தரும்.
தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு மற்றும் பெர்ரி பழங்கள் போன்ற ஹைட்ரேஷன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொண்டு விந்தணுக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. இது கருவுறுதலுக்குத் தேவையான உள் சூழலை உருவாக்க உதவுகிறது.
கோடைக்கால உடற்பயிற்சிகள், சைக்கிளிங், நீச்சல், வாக்கிங் போன்றவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஹார்மோன்கள் சமநிலையில் இருக்க உதவுகின்றன. மேலும் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் போது விந்தணு உற்பத்தியும் சீராக நடக்கிறது.
தூக்க நன்றாக இருக்க, மன அழுத்தம் குறைய வெளிப்புற நடவடிக்கைகள் உதவுகின்றன. இது ஒருங்கிணைந்த ஹார்மோன் செயல்பாட்டையும், இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் தூண்டும். மன அழுத்தம் குறைவாக இருப்பது, விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும்.
டாக்டர் நாயக் கூறுவது போல், கோடைக்காலம் ஒரு தடையாக இல்லாமல், ஒரு வாய்ப்பாக இருக்கலாம். இயற்கையான சூரிய ஒளி, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நன்கு நீரேற்றம் கொண்ட உடல் – இவை அனைத்தும் சிறந்த கருவுறுதலை ஆதரிக்க இணைந்து செயல்படுகின்றன. வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது மூலம் கருவுறுதல் சிகிச்சைகளில் வெற்றி பெற முடியும்.
இந்த அனைத்து பரிந்துரைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டால், கோடைக்காலத்தில் கூட ஆண்கள் தங்களுடைய இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரித்து, பெற்றோராகும் கனவை நனவாக்கும் பாதையில் முன்னேற முடியும்.