சென்னை: நாம் நன்கு அறிந்த ஒரு மசாலா பொருள் ஓமம். ஆங்கிலத்தில், ‘அஜ்வைன்’ என அழைக்கப்படும் இது நமது நாட்டிலேயே தோன்றிய ஒரு மூலிகை செடியாகும். சுமார் ஒரு மீட்டர் உயரம் இது வளர்கிறது. இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்த விதைகளே மருத்துவத்தில் பயன்படுகின்றன. இந்த அற்புத மூலிகை பொருள் ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது.
ஓமத்தில் உள்ள கார்போஹைட்ரேட், கொழுப்பு, நார்ச்சத்துக்கள், புரோட்டீன், சோடியம், பொட்டாசியம், டானின்கள், கிளைக்கோசைட்கள், ஈரப்பதம், சாப்போனின்கள், ஃப்ளேவோன்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கோபால்ட், காப்பர், அயோடின், மாங்கனீஸ், தியாமின் மற்றும் ரிபோஃப்ளாவின் போன்ற மினரல்கள் உள்ளன. ஓம விதைகளை பச்சையாகவோ, தண்ணீரில் கொதிக்க வைத்தோ சாப்பிடலாம். இதில் இருக்கும் தைமால் எனப்படும் எண்ணெயே பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
ஒரு லிட்டர் நீரில் 20 கிராம் வறுத்த ஓமத்தை போட்டு காய்ச்சி அதை 300 மி.கி. ஆக வற்றச் செய்து அதை காலை ஒரு முறை, இரவு ஒரு முறை என சாப்பாட்டிற்கு முன் சாப்பிட செரிமானக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் எண்ணம் சரியாகும். வெறும் ஓம தண்ணீர் சாப்பிட முடியாதவர்கள் சுவைக்கு கற்கண்டு சேர்க்கலாம். குடல் புண் மற்றும் வயிற்றுப்புண் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஓம விதைகள் தீர்வு தருவதாக, சமீபத்தில் வெளியான ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ஓமம் சளியை எளிதில் வெளியேற்றுவதன் மூலம் நாசி அடைப்பைத் தவிர்க்க உதவுகிறது. இதற்கு ஓம விதைகள் மற்றும் வெல்லம் ஆகியவற்றை சூடாக்கி ஒரு லேகியம் தயார் செய்து, அதை 2 டீஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். இருமல், சளி பிரச்னைக்கு ஒரு ஸ்பூன் ஓம விதையுடன், துளசி இலைகளை வேகவைத்து சாற்றை குடித்தால் குணமாகும். நுரையீரலிலுள்ள சளியை அகற்றி வெளியே தள்ளிவிடும். ஓமத்தை ஈரத்துணியில் கட்டி நுகர்ந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும், வறட்டு இருமல் குறையும்.