புகையிலை பல வடிவங்களில் பயன்படுத்துவது குறைந்தது 16 வகை புற்றுநோய்களுடன் தொடர்புடையது என்பதே பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கான விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக புகையிலை தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, புகையிலை மற்றும் நிக்கோட்டின் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பயன்படுத்தும் வியாபார யுக்திகளை வெளிப்படுத்துவதே கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது.

புகையை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம். வயதான பிறகும் துவங்கலாம். இது புற்றுநோய் அபாயத்தைக் குறைத்து, ஆயுளையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும். நிறுத்த முயற்சியில் நிக்கோட்டின் மாற்று சிகிச்சை, மருந்துகள், கவுன்சிலிங் ஆகியவை உதவலாம். ஆனால் உடற்பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடற்பயிற்சி மனநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கிறது. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஓரமாக அழுத்துகிறது. 15 நிமிடங்கள் நடப்பது போதுமானது. சைக்கிள் ஓட்டுவது, ஜாகிங், நீச்சல், நடனம் ஆகியவை கூட சிறந்தவை.
மூச்சுப்பயிற்சிகள் மற்றும் யோகா, மன அழுத்தம் குறையவும், நுரையீரல் திறன் மேம்படவும் உதவும். பிராணாயாமம் மற்றும் யோகாசனங்கள் மன அமைதியை தரும். மேலும் நீட்சிப் பயிற்சிகள் உடல் இறுக்கத்தை குறைத்து, நிம்மதியை ஏற்படுத்தும்.
வலிமைப் பயிற்சிகள் உடலை உறுதியாக மாற்றுவதுடன், மனவலிமையையும் அதிகரிக்கும். ஒரு வாரத்தில் இரு முறை ஸ்குவாட்ஸ், புஷ்-அப் போன்றவை உதவியாக இருக்கும்.
இசைச் சிகிச்சையும் பயனுள்ளதாக இருக்கலாம். உங்கள் விருப்பமான பாடல்களுடன் நடைப்பயிற்சி அல்லது சுவாச பயிற்சிகளைச் செய்யும்போது புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் திசை திரும்பும்.
உடற்பயிற்சி செய்யும் போது டோபமைன், செரட்டோனின், எண்டார்பின் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது மகிழ்ச்சியை தரும், தூக்கத்தை மேம்படுத்தும், நுரையீரல் திறனை அதிகரிக்கும்.
புகையிலையை நிறுத்துவது சவாலானது. ஆனால் அதை கடந்து விட்டால், உங்கள் உடல் முழுமையாக அதற்குப் பதிலளிக்கும். நிச்சயமாக இது உங்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய ஒரு மிக முக்கியமான மாற்றமாக அமையும்.