கோடைக்காலம் துவங்கிய நிலையில், தஞ்சை மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தில் குழந்தைகள் உடல் மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் லெனின் சந்திரசேகர் பெற்றோர்களுக்கான சில முக்கியமான ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார்.

வெயில் காலத்தில், பெரியவர்களை விட குழந்தைகளுக்கு உடலளவில் அதிக பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக நீர்ச்சத்து குறைபாடு மிகவும் பொதுவானது. இந்த பருவத்தில் உணவுகள் எளிதில் கெட்டுப்போகும் என்பதால், பாசிச் செரிவு மற்றும் உணவு விஷபிதம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். எனவே உணவுப்பழக்கங்களில் சிறப்பு கவனம் தேவை.
இளநீர், தர்பூசணி, பழங்கள் போன்ற இயற்கை நீரூட்டும் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். சில பெற்றோர் இவை சளி காய்ச்சலை உண்டாக்கும் என பயப்படும் நிலையில், உண்மையில் அவற்றை அளவோடு கொடுத்தால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. பலாப்பழத்தை தவிர்த்து மற்ற பழங்களை தாராளமாக தரலாம்.
கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களை முழுவதும் தவிர்ப்பது நல்லது. அதேபோல் காரசாரமான, எண்ணெய் மிகுந்த துரித உணவுகளும் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. அதற்குப் பதிலாக காய்கறிகளைக் கொண்டு செய்யப்பட்ட நீர்ச்சத்து அதிகமான உணவுகளை வீட்டில் தயாரித்து வழங்குவது ஆரோக்கியமான தேர்வாகும்.
வெயிலில் குழந்தைகள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக காலை 9 மணிக்கு பிறகு நேரடியான வெப்பத்தால் தோல் பிரச்சனைகள், உடல் சோர்வு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மாலை 5 மணிக்கு பிறகு மட்டுமே வெளியில் விளையாட அனுமதிக்கலாம்.
கோடை விடுமுறையை முன்னிட்டு, பெற்றோர்கள் ஒரு தவறான வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். குழந்தை அழுகிறது என்பதற்காக, செல்போன் கொடுத்து அமைதி கொள்ளச் செய்வது தவறானது. செல்போனில் இருந்து வரும் வெப்பம், வெயில் வெப்பத்துடன் சேர்ந்து, குழந்தைகளில் கண் சோர்வு, மன உளைச்சல், உடல் உஷ்ணம் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.
மொபைலால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரம் செலவிட வேண்டும். வீட்டில் அல்லது வெயிலற்ற பாதுகாப்பான இடங்களில் அவர்கள் விளையாடச் சூழலை உருவாக்க வேண்டும். சிறிது சிறிதாக தண்ணீர் குடிக்கச் சொல்லி, நீர்ச்சத்து சரியாக இருக்க பார்க்க வேண்டும்.
குழந்தைகளின் உடல்நிலை மேம்பட சீரான உணவு, பரந்த மன அமைதி மற்றும் தூய்மைமிக்க சூழல் தேவை. இந்த வெயில் காலத்தில், பாசமான கவனிப்பும், சரியான வழிகாட்டலும் பெற்றோர்களால் வழங்கப்பட வேண்டும். சிறு முயற்சிகள் கூட, குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும் வெற்றியைத் தரும்.