புதுச்சேரியில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதம் துவக்கத்திலேயே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சித்திரையில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும். குறிப்பாக, கோடை காலத்தில் ஏற்படும் பல நோய்கள் மக்களை பாதிக்கின்றன.

மருத்துவரான ஜீவானந்தம் கோடை காலத்தில் நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கினார். தமிழகத்தில் இயற்கையாக கோடை காலங்களில் தர்பூசணி, வெண்பூசணி, பூசணிக்காய் போன்ற நீர் சத்து மிகுந்த காய்கறிகள் வளரும். இந்த காய்கறிகள் கோடைக்காலங்களில் மக்களின் நீர் சத்துக்களை அதிகரிக்க உதவும். எனவே, மக்களுக்கு இவற்றை அதிகமாக பயன்படுத்திக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதன் பிறகு, அம்மை, மூலம், அக்கி போன்ற உடல் வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விரிவாக கூறினார். சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக்கீரை போன்ற கீரைகள் உட்கொள்வதால், உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகி, அம்மை மற்றும் அக்கி, மூலம் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
மேலும், தயிர் மற்றும் மோர் போன்ற உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதால், உடல் குளிர்ச்சியாகி பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பு பெற முடியும். செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தயிரை தவிர்த்து மோர் பயன்படுத்தலாம்.
இருந்தாலும், உப்பு, புளி, காரம் போன்ற உணவுகளை அதிகமாகச் சேர்க்காமலிருப்பது அவசியம். அசைவ உணவுகளை தவிர்த்து, கோடை காலங்களில் பழம் மற்றும் காய்கறிகளை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம், நம்முடைய உடல் நலத்தை காக்க முடியும்.
எனவே, கோடை காலத்தில் இந்த உணவுகளை பயன்படுத்தி, வெப்பத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியம்.