வெயில் காலங்களில் குளிர்ந்த இடத்தில் இருப்பது ஒவ்வொருவருக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும். அதற்காகவே ஏர் கண்டிஷனர் (ஏ.சி.) பெரும்பாலான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. ஆனால் நாள் முழுவதும் ஏ.சி. அறையில் உட்கார்ந்து இருப்பது நம் உடலுக்கு பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் மறக்கக்கூடாது.

முதன்மையாக, ஏ.சி. அறையில் வெண்டிலேஷன் இல்லாமல் நீண்ட நேரம் இருந்தால், காற்றோட்டமும் சூரிய ஒளியும் இல்லாததால் உடலின் இயல்பான பரிமாற்றங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மூச்சு சம்பந்தமான பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். குறிப்பாக ஆஸ்துமா, அலர்ஜி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு சிலர் ஆளாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேபோல், கண்களின் ஈரப்பதம் குறைய வாய்ப்பு உள்ளது. நீண்ட நேரம் ஏ.சி. காற்றில் இருக்கும்போது கண்கள் வறண்டுவிடும். தொடர்ந்து இப்படியான சூழலில் இருப்பதால் கண்பார்வை குறைபாடுகள் வரை ஏற்படக்கூடும். மேலும், தினமும் ஏ.சி. அறையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதால் தலைவலி ஒரு பொதுவான பிரச்சனையாக இருப்பது ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏர் கண்டிஷனர் உடலில் உள்ள ஈரப்பதத்தையும் குறைக்கும். இதன் விளைவாக நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு சிறுநீரக கற்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சனைகளும் வரக்கூடும். கோடைக்காலத்தில் ஏ.சி. அதிகமாக பயன்படுத்தப்படும் போது இந்த அபாயம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.
மிகவும் முக்கியமாக, ஏ.சி. அறையில் சூரிய ஒளி இல்லாமல் இருப்பது மனநிலைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். தூக்கமின்மை, மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் இயக்கம் குறைவதால் எடை அதிகரிப்பு மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளும் நிலவலாம்.
எனவே, ஏ.சி. என்பது வசதிக்காகவே இருக்கவேண்டும், அதை அடிமையாக மாற்றிக்கொள்ளக் கூடாது. சில மணிநேரம் சூரிய ஒளி மற்றும் இயற்கை காற்றில் இருப்பது உடலுக்கு நல்லது. இயற்கையின் ரீதியான சூழ்நிலையை மறந்துவிட்டு, ஏ.சி. சூழலில் மட்டும் இருப்பது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.