இரும்புச்சத்து குறைபாடு என்பது பொதுவாக இரத்த சோகை என அழைக்கப்படுகிறது. இது, உடலில் போதுமான அளவு ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்கள் இல்லாத ஒரு நிலை. தற்போதைய காலத்தில் இது ஒரு பொதுவான ஊட்டச்சத்து குறைபாடாக மாறியுள்ளதோடு, பல உடல் செயல்பாடுகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரும்புச்சத்து என்பது, நோயெதிர்ப்பு உயிரணுக்கள் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாட்டிற்கு உதவும் முக்கிய ஊட்டச்சத்தாகும். ஆனால், இந்தச் சத்து குறைவாக இருந்தால், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் திறனை இழக்கச் செய்கிறது. இதனால் உடலின் பல பாகங்களின் செயல்பாடுகள் குறைகின்றன.

இரும்புச்சத்து குறைபாட்டால் உடலில் ஏற்படும் முதன்மையான சிக்கல்களில் ஒன்று, தொற்றுநோய்கள் அடிக்கடி ஏற்படும் அபாயம். டி செல்கள் என்ற நோயெதிர்ப்பு உயிரணுக்களுக்கு, சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராக போராட அதிக அளவு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இது குறைந்தால், அந்த செல்கள் போதுமான சக்தியை பெற முடியாததால், தொற்றுகள் அடிக்கடி தாக்குகின்றன.
மறைந்துவரும் இன்னொரு முக்கியமான பாதிப்பு சோர்வு மற்றும் இதயச் சிக்கல்கள். இரும்புச்சத்து தசைகளுக்கும் திசுக்களுக்கும் ஆக்ஸிஜன் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறையும்போது, சக்தி குறைவாக இருக்கும். நீண்ட நேரம் ஓய்வெடுத்தாலும், சக்தி தேக்கமடையும், மூச்சுத்திணறல் ஏற்படும், இதயத்திற்கு கூட அதிக அழுத்தம் தரும்.
மூளைச்செயல்பாடும் இதனால் பாதிக்கப்படும். ஆக்ஸிஜன் குறைவால், மன அழுத்தம், கவனம் சிதறல் மற்றும் தெளிவாக சிந்திக்க முடியாத நிலை உண்டாகும். அதோடு, அடிக்கடி தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்படும். இது நெற்றியில் அழுத்தம் போல உணர்வையும் ஏற்படுத்தும்.
இரும்புச்சத்து குறைபாடு தோலின் நிறத்திலும் தாக்கம் காட்டும். ஹீமோகுளோபின் குறைவால், தோலில் வெளிறிய நிலை தெரியும். இது முகம், உதடுகள் மற்றும் கண் இமைகளில் தெளிவாக காணப்படும்.
இதே போல, நகங்கள் உடைதல் மற்றும் முடி உதிர்தலும் ஒரு பொதுவான அறிகுறி. இரும்புச்சத்து குறைவால், கெரட்டின் எனும் நகங்கள் மற்றும் முடி வளர்ச்சிக்கு முக்கியமான புரதத்தின் உற்பத்தி குறைகிறது. இதனால் நகங்கள் வறண்டு உடையும், முடி மெல்லியதாக மாறி உதிரும்.
மேலும், இரவில் கால்களில் கூச்சம், ஊர்வதைப்போல் உணர்தல், ஐஸ் அல்லது மண் போன்ற உணவு அல்லாத பொருட்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவது, நாக்கில் புண்கள் அல்லது மென்மை ஆகியவை கூட இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள். சிறுவர்களில் இது அதிகமாகக் காணப்படும் போது, அவர்களின் உடல் வளர்ச்சியே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த அறிகுறிகளை அஞ்சாமல் கவனிக்க வேண்டும். சீரான உணவுகள், மருத்துவ ஆலோசனை மற்றும் சரியான சத்து மேலாண்மை மூலம் இந்த குறைபாட்டை சமாளிக்கலாம்.