இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் ஆரோக்கியத்தைப் பேணுவது சவாலாக மாறியுள்ளது. வேலைப்பளு, மன அழுத்தம் மற்றும் தவறான உணவுப் பழக்கங்களால் நம்மில் பலர் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை புறக்கணிக்கிறோம். இதனால் சோர்வு, மனநிலை பாதிப்பு, அடிக்கடி நோய் தாக்குதல் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சவுத்ரியின் கூற்றுப்படி, எங்கள் பாட்டி-தாத்தாக்கள் எந்த சப்ளிமெண்ட்களையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இன்றைய தலைமுறை அதே உணவை சாப்பிட்டாலும் உடலில் சத்துக் குறைபாடுகள் வெளிப்படுகின்றன. எனவே ‘உணவு மட்டுமே போதுமானது’ என்ற நிலைமை தற்போது பொருந்தாது.

இந்தியர்களுக்கு அவசியமான மூன்று முக்கிய சப்ளிமெண்ட்கள் குறித்து அவர் பரிந்துரைக்கிறார். முதலில், வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு மனநிலையையும் எடைக் கட்டுப்பாட்டையும் சீராக்குகிறது. சூரிய ஒளியில் இருந்தாலும் போதுமான அளவு உருவாகாததால் கூடுதல் சப்ளிமெண்ட் தேவைப்படுகிறது. அடுத்ததாக, வைட்டமின் பி12 மூளைச் செல்களின் செயல்பாட்டிற்கும், சக்திக்கும், மகிழ்ச்சி ஹார்மோன்கள் உற்பத்திக்கும் இன்றியமையாதது. குறிப்பாக சில மருந்துகளை உட்கொள்பவர்கள் கூடுதல் பி12 சப்ளிமெண்ட் எடுக்க வேண்டியது அவசியம். மூன்றாவது, ஒமேகா-3 ஹார்மோன் சமநிலை, குடல் ஆரோக்கியம், தோல் பாதுகாப்பு மற்றும் இன்சுலின் உணர்திறனில் முக்கிய பங்கை வகிக்கிறது.
சரியான சப்ளிமெண்டுகளை தேர்வு செய்வதற்கு முன் குடல் ஆரோக்கியத்தை சீரமைத்துக் கொள்ள வேண்டும். மேலும், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சத்துக் குறைபாடுகளை புறக்கணிப்பது உடல் மற்றும் மனநிலையை பாதிக்கக்கூடும் என்பதால், ஆரோக்கியத்தைப் பேணும் சரியான நடைமுறைகளை கடைப்பிடிப்பதே சிறந்தது.