கல்லீரல் என்பது வளர்சிதை மாற்றம், ஊட்டச்சத்து செயல்பாடு, நச்சுப்பொருட்கள் வெளியேற்றம், முக்கிய புரதங்கள் உருவாக்கம் என உடலின் முக்கிய செயல்களில் பலவற்றிற்கும் பொறுப்பாக இருக்கும். இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட இந்த உறுப்பின் செயல்பாடுகள் கூட, ஒரு குறிப்பிட்ட நேர நிரலில் தான் இயங்குவது, உயிரியல் ரீதியாக அசாத்தியமான விஷயமாகும். கொழுப்பு, சர்க்கரை, மதுபானங்களை உடைக்கும் கல்லீரலின் திறனே ஒரு நாளின் நேரத்தை பொறுத்து மாறுபடுகிறது.

இந்த நேர நிரலை கட்டுப்படுத்தும் உயிரியல் கடிகாரம், ‘சர்க்காடியன் ரிதம்’ எனப்படும். இது, நம் உடலில் உள்ள ஒவ்வொரு செலிலும் பதியப்பட்டிருக்கும் பயனுள்ள நேர கண்காணிப்பு முறை. சீன மருத்துவத்திலும் இதற்கான ஆதாரங்கள் இருந்துள்ளன. அதில் அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரல் மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நவீன அறிவியல் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
கல்லீரல், 500க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளுக்கு நேரடியாகக் காரணமானது. இவ்வளவு செயல்பாடுகளுடன், இது கூட உயிரியல் கடிகாரத்தை பின்பற்றுவதால், நீங்கள் இரவில் தாமதமாக சாப்பிடும் பழக்கத்தால் மற்றும் ஒவ்வொரு நாளும் வேறுபட்ட நேரத்தில் உறங்குவதால், கல்லீரல் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களில் இந்த பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது.
இந்தப் பழக்கங்கள் ஃபேட்டி லிவர் நோய், இன்சுலின் எதிர்ப்பு, கல்லீரல் புற்றுநோய் போன்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும், கல்லீரலின் உட்புற கடிகாரம், மூளையின் மாஸ்டர் கடிகாரத்தோடு இணைந்து செயல்படுகிறது. இவை உணவின் நேரம், தூக்க நேரம், வெளிச்சத்தின் அளவுக்கு ஏற்ப இயங்குகின்றன.
நாள் முழுவதும் கல்லீரல் செய்யும் முக்கிய செயல்பாடுகளில் அதிகாலையில் குளுக்கோஸ் உற்பத்தி அதிகரிக்கும், உணவு உள்வாங்கும் போது பைல் சாறு உற்பத்தி அதிகரிக்கும், தூக்கத்தின் போது நச்சு நீக்கம் மற்றும் செல்கள் பழுது சரிசெய்தல் நடைபெறும் என்பவை அடங்கும். எனவே இந்த கடிகாரத்தை சீராக வைத்திருக்க சில ஆலோசனைகள் மிக முக்கியம்.
தினமும் ஒரே நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தினசரி உணவை 10 முதல் 12 மணி நேரத்திற்குள் முடித்துவிடுவது கல்லீரலுக்கு ஓய்வளிக்கும். உறங்கும் மற்றும் விழிக்கும் நேரம் ஒரே நேரமாக இருக்க வேண்டும். குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும். மேலும், இயற்கை வெளிச்சத்தில் தினமும் சில நேரம் கழிப்பதன் மூலம் கல்லீரலின் உட்புற கடிகாரம் சீர்பட உதவுகிறது.
நம் முன்னோர்கள் அதிகாலை எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வது, இரவு சூரிய அஸ்தமனத்திற்கு முன் உணவை முடிப்பது, இரவு நேரம் தூங்குவது போன்ற நடைமுறைகளை கடைப்பிடித்ததன் காரணமாக, பல உடல் கோளாறுகளால் விடுபட்டு ஆரோக்கியமாக இருந்தனர். இந்த பழக்கங்களை இன்று மீண்டும் பின்பற்ற ஆரம்பித்தால், நம்முடைய கல்லீரலையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.