பலரும் தங்கள் மருந்துகளை குடிநீர் மட்டுமின்றி, காபி அல்லது டீ போன்ற பானங்களோடு எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. ஆனால் இது சில மருந்துகளின் செயல்பாடுகளையும், உடலில் அதனுடைய உறிஞ்சுதலையும் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒன்றாக இருக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு மருந்தும் தனித்த தன்மையுடன் செயல்படுவதால், காபி அல்லது டீயுடன் சேரும்போது எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம். இது சிலருக்கு அலர்ஜி, எச்சரிக்கையற்ற உடல்நிலை மாற்றங்கள் மற்றும் மருந்து சிக்கல்களை உருவாக்கும்.

எடுத்துக்காட்டாக, ஹைப்போதைராய்டிசத்திற்கு வழங்கப்படும் லீவோதைராக்ஸின் மாத்திரைகளை, காபி அல்லது டீயுடன் எடுத்தால், உடலில் அதன் உறிஞ்சுதல் குறைந்து பலன் சரிவர கிடைக்காது. அதேபோல், ஆஸ்துமா நோயாளிகளுக்கு வழங்கப்படும் தியோஃபைலின் மருந்து காஃபைனுடன் இணையும் போது, இதயத்துடிப்பு அதிகரிக்கவும், பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. டீ மற்றும் காபியில் இருக்கும் டேனின் மற்றும் காஃபைன் போன்ற ஊக்கிகளை இந்த மருந்துகள் சகிக்க முடியாமல், பக்க விளைவுகள் காட்டுகின்றன.
மேலும், ஆன்டி-டிப்ரசன்ட்கள், டயாபடீஸ் மருந்துகள் மற்றும் ரத்த மெலிதல் மாத்திரைகள் போன்றவற்றுக்கும் காபி, டீயுடன் இணையும் போது எதிர்வினை ஏற்படலாம். டீயில் காணப்படும் வைட்டமின் K, ரத்த மெலிதல் மருந்துகளின் விளைவுகளை கட்டுப்படுத்தி, ரத்தக் கசிவிற்கு வழிவகுக்கும். அதேபோல், டயாபடீஸ் மருந்துகளுக்கு எதிராக காஃபைன் செயல்பட்டு ரத்த சர்க்கரையை உயர்த்தும் அபாயமும் உள்ளது. இதய நோய்க்கான பீட்டா-பிளாக்கர்கள் மற்றும் ஸ்டாட்டின்கள் போன்ற மருந்துகளுக்கும் காபி மற்றும் கிரீன் டீவுடன் சேரும் போது விளைவுகள் குறைந்து, மருந்தின் பயன்பாடு வீணாகும்.
அதனால், மருந்துகளை எப்போதும் தண்ணீருடன் மட்டுமே எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் காபி, டீ போன்ற பானங்களோடு மருந்துகளை சாப்பிட வேண்டாம். உங்கள் உடல் மற்றும் நோய்த் தன்மைக்கு ஏற்ப, மருந்துகளின் விளைவுகளை பரிசீலித்து சீரான முறையில் எடுத்துக் கொள்வதே உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.