இன்றைய காலத்தில் பலர் இரவில் போதுமான தூக்கம் பெற்றிருந்தாலும், பகலில் சோர்வாகவும் தூக்கம் வருவதுபோலவும் உணர்கிறார்கள். இதற்குப் பின்புலமாக வானிலை, உடல்நிலை, மன அழுத்தம் போன்ற காரணங்கள் மட்டுமல்ல, நாம் சாப்பிடும் உணவுகளும் முக்கிய பங்காற்றுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பின்படி, டைரமைன் என்ற மூலக்கூறு அதிகமாக உள்ள உணவுகள் பகல் நேர தூக்கத்தை தூண்டக்கூடியவை. டைரமைன் இரத்த அழுத்த கட்டுப்பாட்டில் உதவினாலும், அதன் அளவு அதிகரித்தால் சோர்வும் தூக்கமும் அதிகரிக்கும். நீண்ட காலம் பாதுகாக்கப்படும் சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஈஸ்ட் ஸ்பிரெட்ஸ், ஊறுகாய் மீன்கள் மற்றும் உலர்ந்த அல்லது அதிகம் பழுத்த பழங்கள் டைரமைனில் அதிகம் காணப்படுகின்றன. இவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்வது பகலில் சுறுசுறுப்பை குறைக்கக்கூடும்.

தி லான்செட் இபயோமெடிசின் இதழில் வெளியான ஆய்வில், உணவு மற்றும் மரபியல் இணைந்து பகல் நேர தூக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பகலில் அடிக்கடி தூக்கம் வருவது, சில சமயங்களில் இதய செயலிழப்பு அல்லது டிமென்ஷியா போன்ற நோய்களின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம். அதனால் மதிய வேளையில் தொடர்ந்து சோர்வாக இருப்பதை சாதாரணமாகக் கருதாமல் கவனிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக, டைரமைன் அதிகம் உள்ள உணவுகளை குறைத்து, ஒமேகா-3 கொண்ட மீன்கள், பச்சை காய்கறிகள், நட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்க்கலாம். உணவு நம் உடலுக்கான எரிபொருள் மட்டுமல்ல, அது கவனம், மனநிலை, உழைக்கும் திறன் ஆகியவற்றையும் தீர்மானிக்கிறது. எனவே, உணவு பழக்கங்களில் எளிய மாற்றங்கள் கூட பகல்நேர ஆற்றலை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவும்.