இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே “உலகின் நீரிழிவு தலைநகரம்” என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கிறது. 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் இதற்கான காரணமாக இனிப்புகளை குற்றம் சாட்டினாலும், உண்மையில் டயாபடீஸின் வருகை வெறும் சர்க்கரை சாப்பிடுவதால் மட்டுமே இல்லை. இந்தியர்களின் உடல் அமைப்பு, வாழ்க்கை முறை மற்றும் மரபு காரணிகளும் அதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆசிய இந்தியன் ஃபினோடைப் எனப்படும் தனித்துவமான உடல் அமைப்பு இந்தியர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. வெளிப்படையாக ஒல்லியாக இருந்தாலும், வயிற்றைச் சுற்றி அதிக கொழுப்பு குவிவது, தசைகள் குறைவாக இருப்பது, இன்சுலின் எதிர்வினை குறைதல் போன்ற காரணங்களால் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகத் தங்கி விடுகிறது. பெற்றோரில் ஒருவருக்கு நீரிழிவு இருந்தால், அடுத்த தலைமுறையினருக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. இதனுடன், நகர வாழ்க்கை, அலுவலகப் பணி, நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது போன்ற பழக்கங்கள் பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன.
அதிக கார்போஹைட்ரேட்ஸ் கொண்ட உணவுகள் – அரிசி, ரொட்டி, உருளைக்கிழங்கு, வறுத்த உணவுகள் – தொடர்ந்து உண்ணப்படுகின்றன. அதோடு பக்கோடா, சமோசா, ஜங்க் ஃபுட்ஸ், கார்போனேட்டெட் பானங்கள் போன்றவை சேரும்போது ரத்தச் சர்க்கரை அளவு எளிதில் உயர்கிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, உடற்பயிற்சி குறைவு ஆகியவை ஹார்மோன் சமநிலையை பாதித்து, நீரிழிவை இன்னும் சீக்கிரமே வரவழைக்கின்றன. இதனால் மேற்கத்திய நாடுகளை விட இந்தியர்களில் டைப் 2 நீரிழிவு 20 மற்றும் 30 வயதிலேயே அதிகமாகக் காணப்படுகிறது.
இருப்பினும், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் கொண்டு வந்தால் இதை கட்டுப்படுத்த முடியும். 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் குடும்ப வரலாற்றில் நீரிழிவு இருப்பவர்கள் பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும். தினசரி உணவில் நார்ச்சத்து அதிகமான காய்கறி, பருப்பு, தினை வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவுக்குப் பிறகு 30 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்வதும், தூக்கத்தைச் சீர்படுத்துவதும் பல நன்மைகளைத் தரும். பண்டிகைகளில் இனிப்புகளை மிதமான அளவில் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், நீரிழிவு ஆபத்தை குறைக்க முடியும்.