மழைக்காலங்களில் வளிமண்டல ஈரப்பதம் அதிகரிப்பதால், வீட்டு மின்னணு சாதனங்களில் எதிர்வினை ஏற்படுகிறது. குறிப்பாக ஃபிரிட்ஜிலும் ஃப்ரீசரிலும் பனிக்கட்டி மலைபோல் குவிவதை நாமேப் பார்த்திருப்போம். இது குளிர்ச்சியை பாதிக்கும் மேலும் மின்சார நுகர்வையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, ஃப்ரீசர் கதவை திறக்கும் போது வெளியேறும் பனிக்கட்டிகள், அதன் செயல்திறனை பாதிக்கும் அளவுக்கு இருக்கும்.
அதிகமாக பனிக்கட்டி குவிந்தால், அதை உருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி ஃபிரிட்ஜை அணைப்பது, அதன் வாழ்க்கைக் காலத்தையே குறைக்கும். மேலும், நீங்கள் ஃபிரிட்ஜை சுவருக்கு ஒட்டவைக்கும்போது, காற்றோட்டம் குறைந்து, வெப்பம் வெளியேறாததால், ஃபிரிட்ஜ் விரைவில் பழுதடையும். இத்தகைய தவறுகளை தவிர்க்க, ஃபிரிட்ஜை சுவரிலிருந்து சிறிது தொலைவில் வைக்க வேண்டும்.

ஃபிரிட்ஜை அதிக நேரம் திறந்தவாறு வைக்கக் கூடாது. இது வெளியே வரும் வெப்பக் காற்றுடன் உள்ளே இருக்கும் குளிர்ந்த காற்று கலந்து ஈரப்பதத்தை உருவாக்கி, பனிக்கட்டி உருவாகச் செய்யும். இதனால்தான், உணவை எடுத்தவுடன் கதவை மூடுவது மிக முக்கியம். அதுபோல், வெதுவெதுப்பான உணவுகளை உடனடியாக ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. உணவுகள் முற்றிலும் குளிர்ந்த பிறகு மட்டுமே வைக்க வேண்டும்.
பனி உறைவதை தடுக்க உப்பை பயன்படுத்தலாம் என்பது ஒரு எளிய ஹேக். உப்பு பனிக்கட்டியின் உருகுநிலையைக் குறைத்துவிடுகிறது. மேலும், ஃபிரிட்ஜ் கதவின் ரப்பர் பாகத்தை சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். அது மாசாக இருந்தால், கதவு சரியாக அடைக்கப்படாது; இதுவும் உள்வெப்பத்தை பாதித்து பனிக்கட்டியை அதிகரிக்கச் செய்யும். இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், ஃபிரிட்ஜை பராமரிக்க எளிதாகும்.