மழைக்காலம் தொடங்கும் போது, பலர் குளிர் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த விரும்புகின்றனர். ஆனால் ஆரோக்கியக் கண்ணோட்டத்தில், மழைக்காலங்களில் மது அருந்துவது உடலுக்கு மிகவும் தீங்கானது என்று ஆராய்ச்சி முடிவுகள் எச்சரிக்கின்றன.

இந்த காலகட்டத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தி ஏற்கனவே குறைந்திருக்கும். இதனுடன் மது சேரும்போது அது மேலும் பலவீனப்படுத்தி சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது. ஆல்கஹால் சிறுநீர் பெருக்கியாக இருப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. மழைக்காலத்தில் ஏற்கனவே நீர்ச்சத்து இழப்பு அபாயம் இருக்கும் நிலையில் இது உடலுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
மேலும் மழைக்காலங்களில் செரிமானம் மந்தமாக இருக்கும் போது மது அருந்துவது அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடலின் வெப்பநிலை சீராக இருக்காமல் போவதால் சளி மற்றும் வைரஸ் தொற்று தாக்கும் அபாயம் கூடுகிறது.
மழைக்காலங்களில் டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நீர் வழி நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கிறது. மது அருந்துவது கல்லீரலில் அழுத்தம் ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைக்கிறது. தூக்கக் கலக்கம் மற்றும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
இதனால், ஆரோக்கிய நிபுணர்கள் மழைக்காலங்களில் மது அருந்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.