இன்றைய நவீன வாழ்க்கையில் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பது சாதாரணமாகிவிட்டது. இது பெற்றோருக்கு வசதியாக இருந்தாலும், நீண்ட காலத்தில் குழந்தைகளின் உடல்நலத்துக்கும் பழக்கவழக்கத்துக்கும் பாதிப்பு உண்டாக்குகிறது.
இந்திய குழந்தை மருத்துவ அகாடமி கூறுவதுப்படி, குழந்தைகளுக்கு 18 முதல் 24 மாதங்களுக்குள் கழிப்பறைப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இந்த வயதில், குழந்தைகள் தங்களின் இயற்கை தேவைகளை உணரும் திறனை வளர்த்துக்கொள்வார்கள். அதனால், பகலில் கழிப்பறையைப் பயன்படுத்த பழகுவார்கள், இரவில் சௌகரியமாகத் தூங்குவார்கள்.

சில பெற்றோர்கள், 3 வயதிற்கும் மேல் குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பதைத் தொடர்கிறார்கள். இது குழந்தைகளை சோம்பேறியாக்குவதோடு, கழிப்பறைக்கு பழகுவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், பூஞ்சை தொற்று, சிறுநீர் பாதை தொற்று, தோல் பிரச்சினைகள் போன்ற அபாயங்கள் அதிகரிக்கும்.
நிபுணர்கள் பரிந்துரைப்பது என்னவெனில், குழந்தை 1.5 முதல் 2 வயது ஆனதும், டயப்பர் பயன்பாட்டை மெல்லக் குறைத்து, கழிப்பறைப் பயிற்சியை தொடங்க வேண்டும். 3 வயதிற்குள் குழந்தைகள் கழிப்பறையைப் பயன்படுத்த பழகுவது அவசியம்.
பெற்றோர் காலையில் எழுந்ததும், இரவில் படுக்கும் முன்பும் குழந்தைகளை கழிப்பறைக்குச் செல்ல ஊக்குவிக்க வேண்டும். இது ஒரு பழக்கமாக மாறி, அவர்களின் நல்ல உடல்நலம் மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறைக்கு அடிப்படையாக இருக்கும்.