ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சுவையானதும், வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட் நிறைந்ததுமான ஆரோக்கியமான பழமாகும். ஆனால் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக TikTok வீடியோக்கள் மற்றும் Pinterest போர்டுகளில், ஸ்ட்ராபெர்ரி பழங்களை பற்களை வெண்மையாக்க பயன்படுத்தும் டிரிக் டிரெண்ட் ஆகி வருகிறது.

இதில் ஒரு அளவுக்கு உண்மை இருப்பினும், மருத்துவர்கள் இது தற்காலிக மாற்றம் மட்டுமே என எச்சரிக்கின்றனர். ஸ்ட்ராபெர்ரியில் காணப்படும் மாலிக் அமிலம் பற்களில் காபி, தேநீர் போன்ற பானங்களால் ஏற்பட்ட லேசான கறைகளை அகற்ற உதவுகிறது. அதனால் பற்கள் சிறிதளவு வெண்மையாகக் காட்சியளிக்கலாம். ஆனால் பற்களின் இயல்பான நிறத்தை இது மாற்றாது.
அதே நேரத்தில், ஸ்ட்ராபெர்ரி பழங்களை அடிக்கடி பற்களில் தேய்த்தால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். காரணம், அதிலுள்ள அமிலம் பற்களின் எனாமலை மெதுவாக அரித்துவிடும். இதனால் பற்கள் பலவீனமடைந்து, ஈ உணர்திறன் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே பயன்படுத்திய பிறகு வாயை நன்றாகக் கொப்பளித்து, பல் தேய்ப்பதற்கு முன் குறைந்தபட்சம் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பற்களை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வெண்மையாக்க ஃப்ளூரைடு அடிப்படையிலான டூத் பேஸ்ட் பயன்படுத்துவது, தினசரி இரண்டு முறை துலக்குவது, ஃபிளாஸிங் செய்வது, பல் மருத்துவரை வழக்கமாக சந்திப்பது போன்ற முறைகளே சிறந்தவை.
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் தற்காலிக வெண்மை தரினும், அது ஒரு நிரந்தர தீர்வாக இல்லை. எனவே பற்களுக்கு கறை உண்டாக்கும் பானங்களை குறைத்து, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவது தான் நீண்டகால சிரிப்பு அழகை பாதுகாக்கும் வழி.