முதுகுத்தண்டு என்பது நம் உடலின் தோரணை மற்றும் நகர்வுத்தன்மைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு உறுப்பு. எனினும், நாம் தினமும் படுத்து உறங்கும் நிலையானது முதுகுத்தண்டு ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கக் கூடும். பலர் தவறுதலாக தூங்கும்போது, முதுகுத்தண்டில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறோம். இதனால் முதுகு தண்டில் இறுக்கம், முதுகு வலி அல்லது நாள்பட்ட முதுகுத்தண்டு பிரச்சனைகள் உருவாகலாம். மேலும், நாம் தூங்கும் போது உடலின் குணப்படுத்தும் செயல்முறை செயல்படுகிறது. ஆனால், முதுகுத்தண்டு சரியான நிலையில் இல்லாவிட்டால், இந்த குணப்படுத்தும் செயல்முறை தாமதப்படலாம்.

பொதுவாக, குப்புறப்படுத்து உறங்குவது தவறான தூக்க நிலையாக கருதப்படுகிறது. நீண்ட நேரம் இந்த நிலைக்கு படுக்கும் போது, உங்களுடைய தண்டுவட எலும்பில் கோளாறு ஏற்பட்டு, நரம்பு அசௌகரியமும், தசைகளில் பதட்டம் ஏற்படும். இது கீழ் முதுகில் வலியை உண்டாக்கும். எனவே, நேராக முதுகு தரையில் படுப்பது முதுகுத்தண்டு ஆரோக்கியத்திற்கு சிறந்த நிலையாக கருதப்படுகிறது. இதில், உங்கள் கால்களுக்கு தலையணைகளைப் பயன்படுத்துவது நல்லது. எனினும், சிலருக்கு குறட்டை விடும் பழக்கம் அல்லது ஸ்லீப் ஆப்னியா உள்ளவர்களுக்கு இந்த நிலை சரியானதாக இருக்காது.
முதுகுத்தண்டு சௌகரியமாக இருப்பதற்கு, ஒருக்களித்து படுவது உதவியாக இருக்கலாம். இந்த நிலையில், கால் முட்டிகள் லேசாக வளைந்து, அவற்றுக்கிடையில் ஒரு தலையணையை வைத்துக் கொள்ளலாம். இதனால் முதுகு, இடுப்பு எலும்பு மற்றும் முதுகுத்தண்டு சரியான நிலையில் சீரமைக்கப்படும். இருப்பினும், குழந்தை கர்ப்பப்பையில் இருப்பதைப் போன்றது, கால்களை அதிகமாக குறுக்குவது தவிர்க்கப்பட வேண்டும். இதுவும் முதுகு தண்டில் அழுத்தத்தை ஏற்படுத்தி, சுவாச பிரச்சனைகளையும் உண்டாக்கலாம்.
தூக்கத்தின் போது, முதுகு தண்டில் அழுத்தம் ஏற்பட்டால், கழுத்து அல்லது கீழ் முதுகு பகுதியில் வலி ஏற்படும். இந்த வலி ஆரம்பத்தில் லேசாக இருக்கும், ஆனால் அது நாள்பட்ட பிரச்சனைகளாக மாறும்.
மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், முதுகுத்தண்டு அசௌகரியத்தை சிகிச்சை செய்வது, ஒருவரின் உடல் மற்றும் மருத்துவ வரலாற்றை சார்ந்தது. முதுகுத்தண்டின் அமைப்பில் பிரச்சினைகள் இருப்பின், MRI அல்லது எக்ஸ்-ரே பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம். மேலும், முதுகுத்தண்டின் அமைப்பை மேம்படுத்த, சிறந்த தூக்க நிலைகளை கற்றுக்கொள்வது முக்கியம். தற்காலிக நிவாரணத்திற்கு, வீக்கத்தை குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். சிலருக்கு, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை கூட தேவையாகலாம்.
இதன் மூலம், முதுகுத்தண்டின் ஆரோக்கியத்தை கவனித்து, தூக்க நிலைகளை சரியாக பராமரிப்பது முக்கியமானது. மேலும், வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்து, முதுகுத்தண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.