தலைமுடி என்பது ஒருவரின் தோற்றத்தை மட்டும் இல்லாமல், தன்னம்பிக்கையையும் பெரிதும் பாதிக்கும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. தினசரி சிறிய அளவிலான முடி உதிர்வுகள் இயற்கையானவை. ஆனால் தொடர்ந்து அதிகளவிலான முடி உதிர்வு கவனிக்க வேண்டிய உடல் நலச்சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில், அந்த இடத்தில் மீண்டும் முடி வளர்ச்சி காணப்படலாம். ஆனால் சில நேரங்களில், அது தடைபடக்கூடும்.

தலையில் சொட்டைபோன்ற பகுதிகள் தோன்றுவது, அல்லது முடி மிக மெலிந்துபோகும் நிலை, ஆண்ட்ரோஜெனிடிக் அலோபிசியா போன்ற நிலைகளுக்கு சாத்தியமான அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறான மாற்றங்கள் தோன்றும் போது தோல் நிபுணரை அணுகுவது அவசியம். மேலும், தலைச்சருமத்தில் அரிப்பு, சிவத்தல் அல்லது வெள்ளை துகள்கள் காணப்படுவது, தொற்று, பொடுகு அல்லது சொரியாசிஸ் போன்ற கோளாறுகளின் அறிகுறிகளாக இருக்கலாம்.
திடீரென ஏற்படும் அளவுக்கு அதிகமான முடி உதிர்வும் கவனிக்க வேண்டியது தான். இது மனஅழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், தைராய்டு பிரச்சனை அல்லது உணவுசத்து குறைவால் ஏற்படக்கூடும். முடி உதிர்ந்த இடங்களில் மீண்டும் வளர்ச்சி காணப்படாமல் போவதும் கூட கவனத்திற்குரியது. இதோடு உடல் எடை அதிகரிப்பு, சோர்வு, மாதவிடாய் சுழற்சிகளில் மாற்றங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவர் ஆலோசனை தேவை.
முடி மிக எளிதாக உடைந்து விழுவது, உடல் நலம் குறைவாக இருப்பதையும் உணவுக்குறைவையும் குறிக்கலாம். வெப்பம், ஸ்டைலிங், கலரிங் போன்றவைகள் முடியை மெலிதாக்கும். இதை சமாளிக்க ஆழமான கண்டிஷனிங், புரோட்டின் மாஸ்க் போன்றவை பயனளிக்கலாம்.
தலைமுடியின் ஒழுங்கற்ற மாற்றங்களை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடி கவனிப்பும் மருத்துவர் ஆலோசனையும் தேவை.
தலைமுடி சுகாதாரத்தை பாதுகாப்பது, உடல்நலத்தை உறுதியாக வைத்துக்கொள்ள ஒரு முக்கிய அங்கமாகும்.