சென்னை: பாட்டி வைத்தியம் என்ற பெருமை நம் இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தமானது. நம் சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் தனி மருத்துவ குணம் உண்டு.
இதை தெரிந்து கொண்ட நம் பாட்டிகள், தலைவலி, சளி போன்ற பிரச்னைகளுக்கு டாக்டரை அணுகாமல் வீட்டிலேயே மருத்துவம் செய்துக் கொண்டனர். அதைத்தான் ‘பாட்டி வைத்தியம்’ என்றும் அழைக்கிறோம்.
அப்படிப்பட்ட ‘பாட்டி வைத்தியங்கள்’ சில… வீட்டில் அன்றாடம் பயன் படுத்தப்படும் பட்டை மற்றும் தேன் இரண்டுக்கும் பல மருத்துவ குணங்கள் உண்டு. இவற்றை சேர்த்து சாப்பிட்டால், சில உபாதைகளை நாமே விரட்டி விடலாம்.
வயதானவர்கள், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மூட்டு வலி ஒரு சாபக்கேடு. இவர்கள் ஒரு ஸ்பூன் தேனை இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் கலந்து அதனுடன் கொஞ்சம் பட்டைத் தூளை சேர்த்து குழைத்து வலியுள்ள இடத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், வலி குறையும். இதேபோல ஒரு கப் சுடு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் பட்டைத் தூளை சேர்த்து காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆர்த்ரடிஸ் குணமாகும்.
ஆண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் இப்போது வேலை மற்றும் மனஉளைச்சல் காரணமாக முடி அதிகமாக உதிர்கிறது. சிலருக்கு வைட்டமின் குறைபாட்டாலும் இப்பிரச்னை இருக்கும். இதை போக்க குளிக்கும் முன் காய்ச்சிய ஆலிவ் எண்ணையில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசினால் முடி உதிர்வது குறையும்.
சிறுநீர்ப்பையில் தொற்று நோய் ஏற்பட்டவர்கள் இரண்டு ஸ்பூன் பட்டைத் தூள், ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீர்ப்பையில் உள்ள கிருமிகள் அழியும். தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.