சூயிங் கம் எல்லோருடைய குழந்தைப் பருவத்திலும் தவறாமல் இடம் பெறும் ஒன்று. ஸ்டைலுக்காகவோ அல்லது சுவைக்காகவோ இதை மென்று மகிழ்ந்திருக்கிறோம். சமீபகாலங்களில் சூயிங் கம் மெல்வதால் மனநிலை சீராகவும், எடை கட்டுப்பாட்டிலும் உதவுகிறது என கூறப்படுகிறது. ஆனால் அதை சாப்பிடும் போது குழந்தைகள் விழுங்காமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம்.

சிறுவயதில், சூயிங் கம்மை விழுங்கினால் அது வயிற்றில் ஏழு வருடங்கள் இருக்கும் என்று ஒரு கதையை கேட்டிருக்கலாம். ஆனால் நிபுணர்கள் கூறுவதாவது, இது ஒரு கட்டுக்கதை. உண்மையில், சூயிங் கம் விழுங்கப்பட்டாலும் அது செரிமான அமைப்பில் சில மணி நேரங்களில் அல்லது நாட்களில் மலம் வழியாக வெளியேறிவிடுகிறது.
சூயிங் கம் ரெசின், சுவையூட்டிகள், செயற்கைப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் உடலில் எளிதில் கரையாது. அதனால் அதை உடல் ஜீரணிக்க முடியாமல் நேரடியாக வெளியேற்றுகிறது. பெரும்பாலும் இது பிரச்சனையில்லாமல் முடிவடையும். ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில், குறிப்பாக குழந்தைகளிடம், அதிகமாக விழுங்கப்பட்டால் குடலில் அடைப்பு ஏற்படும் அபாயம் உண்டு. இதனால் வாந்தி, குமட்டல் அல்லது வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
மருத்துவர்கள் கூறுவதாவது, எப்போதாவது சூயிங் கம்மை விழுங்குவது பாதிப்பில்லை. ஆனால் அடிக்கடி விழுங்குவது குடல் பிரச்சனைகளை உருவாக்கும். எனவே குழந்தைகளுக்கு சூயிங் கம் கொடுக்கும்போது சர்க்கரை இல்லாத வகைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் விழுங்காமல் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
ஆகவே, சூயிங் கம் வயிற்றில் ஏழு வருடங்கள் இருக்கும் என்பது வெறும் புனைகதை மட்டுமே. உண்மையில் அது சில நாட்களிலேயே வெளியேறிவிடும்.