15 ஆண்டுகளுக்குப் பிறகு, மருத்துவ உலகையே பரபரப்புக்குள்ளாக்கும் வகையில் ‘குவாடா நெகட்டிவ்’ எனப்படும் 48-வது புதிய இரத்தக் குழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண இரத்தப் பரிசோதனையில் தோன்றிய மர்மமான ஆன்டிபாடியிலிருந்து ஆரம்பித்து, 15 வருட நீண்ட விஞ்ஞான ஆராய்ச்சியின் முடிவாக வெளிவந்த பெரும் சாதனையாகும். பிரான்ஸில் உள்ள விஞ்ஞானிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த இரத்தக் குழு முதலில் 2011ல் குவாடலூப்பைச் சேர்ந்த 54 வயதுப் பெண்ணிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது இரத்தம் எந்த அறியப்பட்ட இரத்த வகையுடனும் பொருந்தவில்லை. அதனால், விஞ்ஞானிகள் அதனை சாத்தியமான மரபணு சிக்கலாக கருதி பாதுகாத்தனர். 2019ல் டிஎன்ஏ வரிசைப்படுத்தலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, அதே மாதிரியை மீண்டும் ஆய்வு செய்தனர். அதில் முற்றிலும் புதிய மரபணு மாற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த மாற்றம் அவரது இரு பெற்றோரிடமிருந்தும் வந்ததால், இந்தப் பெண் உலகிலேயே ஒரே இரத்த வகையைக் கொண்ட ஒரே நபராக இருக்கிறார். அதனால், அவசர சிகிச்சைக்குத் தேவைப்படும் போது, அவருக்கே அவருடைய இரத்தம் மட்டுமே பொருந்தும் என்பதன் காரணமாக, இது மிகவும் அரிதான மற்றும் ஆபத்தான நிலையாகும். இவரது பிறப்பிடத்தை நினைவுகூரும் வகையில், புதிய இரத்தக் குழுவிற்கு ‘குவாடா நெகட்டிவ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விஞ்ஞான வளர்ச்சி, இரத்த நன்கொடை முறைகளின் முக்கியத்துவத்தையும், மரபணு சார்ந்த மருத்துவ ஆய்வுகளில் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் எவ்வளவு அவசியம் என்பதைவும் வலியுறுத்துகிறது. இன்னும் பல மர்மமான மரபணுக் கோட்பாடுகள் உலகில் இருக்கும் என்பதையும் இது நினைவுபடுத்துகிறது. ‘குவாடா நெகட்டிவ்’ போன்ற கிட்டத்தட்ட “அம்சங்கள் இல்லாத” இரத்தக் குழுக்கள், மருத்துவ சிக்கல்களை தீர்க்க புதிய பாதைகளை உருவாக்கும் வகையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடியவை.