இன்றைய தலைமுறையில் குழந்தை பெறுவது ஒரு இயல்பான செயல்பாட்டை விட, திட்டமிட்ட முயற்சியாகவே மாறியுள்ளது. திருமணத்திற்கு பின்னர் உடனடியாக கர்ப்பம் தரித்தல் வழக்கமான ஒன்றாக இருந்த காலங்களில் இருந்து, தற்போது செட்டில் ஆன பிறகே குழந்தை பெறலாம் என எண்ணி தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனால், வயது மற்றும் உடல்நலக் காரணங்களால், பல தம்பதிகள் சிகிச்சை வழியே கருத்தரிப்பதற்கே செல்ல நேரிடுகிறது. இதனால், கர்ப்பம் என்பது சிலருக்கே கிடைக்கும் கனவாக மாறிவிட்டது.

அந்த கனவின் தொடக்கமான கருப்பையில் குழந்தை தங்கிய பின், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வாந்தி எப்போது வரும், அது கர்ப்பத்தின் முதல் அறிகுறியா என சந்தேகம் பலரிடமும் உள்ளது. ஹர்ஸிந்தகி இணையதளத்தில் மகபேறு மருத்துவர் சோனு கோகரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவரது கூற்றுப்படி, கருத்தரித்த 6 முதல் 14 நாட்களுக்குள் hCG எனும் ஹார்மோன் உருவாகத் தொடங்குகிறது. இதுவே கர்ப்பத்தின் பல அறிகுறிகளுக்கு காரணமாகும்.
வாந்தி, குமட்டல் போன்றவை கருத்தரித்த 6 முதல் 8 வாரங்களுக்குள் பொதுவாகத் தொடங்கும். ஆனால் சில பெண்கள் ஒரு வாரத்திற்குள் லேசான குமட்டலை உணரக்கூடும். சிலருக்கு இது 12வது வாரத்திலிருந்துதான் அதிகம் உணரப்படும். எனவே வாந்தி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இல்லாமல், உடலமைப்புக்கு ஏற்ப மாறுபடும். வாந்தி உணர்வு, உணவுகள், வாசனை, மனநிலை என பல காரியங்களால் அதிகரிக்கலாம். பொதுவாக 12–16 வாரங்களுக்கு பிறகு இது குறைய தொடங்கும்.
கர்ப்பத்தின் முக்கிய அறிகுறிகளில் தவறிய மாதவிடாய், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, மார்பில் எரிச்சல், லேசான இரத்தப்போக்கு, உணர்ச்சி மாற்றங்கள், வாசனை உணர்வுகள் அதிகரித்தல் ஆகியவை அடங்கும். இந்த அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம். கருத்தரிப்பின் நடைமுறைப் பயணம் சிக்கலானதாக இருக்கலாம், ஆனால் முறையான கவனிப்பு மற்றும் சோதனைகள் மூலம் அது வெற்றிகரமாக மாறும்.