உணவு தயாரிப்பில் எண்ணெய்க்கு முக்கிய பங்கு உண்டு. இது சுவையைக் கூட அதிகரிக்கிறது, உடலுக்கு தேவையான கொழுப்புகளை வழங்கி, ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆனால் இன்று சந்தையில் எண்ணெய்கள் பலவகையானவை கிடைக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நன்மைகள் உள்ளதால், சரியான எண்ணெயை தேர்வு செய்வது சற்று சிக்கலாகவே இருக்கிறது.

ஆலிவ் எண்ணெய், குறிப்பாக எக்ஸ்ட்ரா விர்ஜின் வகை, உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது. இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலின் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன. அதோடு, இதய நோய்கள், புற்றுநோய், மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றின் அபாயத்தையும் குறைக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆன்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபிளமேட்டரி பண்புகளும் இதில் அதிகம் காணப்படுகின்றன.
அவகேடோ எண்ணெயும் ஆரோக்கியமான தேர்வாகக் கருதப்படுகிறது. இதில் அதிக அளவிலான ஒலிக் ஆசிட் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளதால், இதய நலம், எடை கட்டுப்பாடு மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும். அதேபோல், கனோலா எண்ணெயிலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு குறைபாடுகள் போன்றவை குறைவடைகின்றன.
பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் எள் எண்ணெயும், சமீபத்தில் பிரபலமான ஆளிவிதை எண்ணெயும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவையாக உள்ளன. எள் எண்ணெய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உடல்நிலையைச் சமனாக்க உதவுகிறது. ஆளிவிதை எண்ணெயில் உள்ள லிக்னான்கள் மற்றும் ஒமேகா-3, 6 கொழுப்புகள் இதய நோய்கள், புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, எண்ணெய் தேர்வில் உங்கள் உடல் தேவைகள் மற்றும் உணவு பழக்கங்களை பொருத்துக் கொண்டு அறிவுப்பூர்வமாக தேர்வு செய்வது அவசியம்.