பொதுவாக நாம் மூன்று வேளை உணவை நம் வசதிக்கும் நேரத்திற்கும் ஏற்ப சாப்பிடுகிறோம். ஆனால், “காலை உணவை ராஜாவைப் போல, மதிய உணவை இளவரசனைப் போல, இரவு உணவை ஏழையைப் போல” என்ற பழமொழி நாம் அனைவரும் கேட்டிருப்போம். இந்த பழமொழியின் முக்கியத்துவம் இரவு உணவை மிதமாக எடுத்துக்கொள்ளும் ஆலோசனையில் உள்ளது.

இரவு உணவிற்குப் பிறகு உடல் 7 முதல் 8 மணி நேரம் செயலற்ற நிலையில் தூக்கத்தில் இருக்கிறது. அதனால் ஜீரணத்திற்கு சிரமம் ஏற்படாமல் இருக்க, இரவு உணவை லைட்டாகவும், சில மணி நேரம் முன்பே எடுத்துக்கொள்ளவும் நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். தூங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும் என்பதே அவர்களின் அறிவுரை.
உதாரணமாக, நீங்கள் அதிகாலை 1 மணிக்கு தூங்குபவர் என்றால், இரவு 10 மணிக்குச் சாப்பிடலாம் என்று அர்த்தமல்ல. உங்கள் தூக்க நேரத்தை அடிப்படையாகக் கொண்டு, உணவுக்கும் தூக்கத்திற்கும் இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
இரவு உணவை சீக்கிரம் சாப்பிடும் பழக்கம் நம் உடல்நலத்திற்கே பல நன்மைகளை தருகிறது. செரிமானம் சிறப்பாக நடைபெறும், உடல் எடையை கட்டுப்படுத்த முடியும், நல்ல தூக்கம் கிடைக்கும். குறிப்பாக மாலை 6 முதல் 7 மணிக்குள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்ததாகும்.
இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது நம் உடலின் இயற்கை கடிகாரத்தை பாதிக்கக்கூடும். இது தூக்கத்தில் தடையாக இருந்து, கலோரி செயலாக்கத்தை குறைக்கும். மேலும், ஆசிட் ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஆய்வுகளின்படி, சீக்கிரம் சாப்பிடுவது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு அபாயத்தை குறைக்கும்.
நேரத்தினால் 6 – 7 மணிக்குள் சாப்பிட முடியாதவர்களுக்கு, குறைந்தபட்சம் இரவு 8.30 மணிக்குள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. வேலைப்பளுவில் இருப்பவர்கள் காலையில் சில சமையல் ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கலாம். இல்லையெனில், வெளியிலேயே ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்து சாப்பிடலாம். இரவில் பசி எட்டினால், ஒரு கிளாஸ் சூடான பாலை அல்லது கிரீன் டீயை எடுத்துக்கொள்ளலாம்.
சரியான நேரத்தில் இரவு உணவை எடுத்துக்கொள்வது நம் உடலை மீளுருவாக்கிக்கொள்ளும் நேரத்தை தருவதால், அடுத்த நாள் அதிக சுறுசுறுப்புடன் செயல்பட முடிகிறது.