பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ஸ்கிரீனிங் சோதனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சோதனைகள் வலியற்றவையாகவும், எளிமையாகவும் இருக்கும். பெரும்பாலான நேரங்களில், இதய குறைபாடுகள், வளர்சிதை மாற்ற கோளாறுகள் அல்லது காது கேளாமை போன்ற சில நிலைகள் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் காட்டாமல் இருக்கலாம். இதனால் இவைகள் கண் அறியாமலே நீடித்து, எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் உண்டு.

ஒரு குழந்தை தாயின் கருவில் 10 மாதங்கள் வளர்ந்து பிறந்த பின், முதல் சில நாட்களில் உடலில் வேகமான மாற்றங்களைச் சந்திக்கிறது. பலர் குழந்தைகள் ஆரோக்கியமாகவே பிறக்கின்றனர் என்ற எண்ணத்தில் பரிசோதனையை தவிர்ப்பார்கள். ஆனால் சிலர் மறைந்திருக்கும் மருத்துவ கோளாறுகளுடன் பிறக்கலாம். இதை முன்கூட்டியே கண்டறிவதே ஸ்கிரீனிங் சோதனையின் முக்கிய நோக்கம்.
மேக்ஸ் ஸ்மார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நியோனாட்டாலஜி மருத்துவரான டாக்டர் வருண் விஜ் கூறுகையில், இந்த பரிசோதனைகள் குழந்தையின் நீண்டகால நலத்திற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருக்கின்றன. பொதுவாக, குழந்தை பிறந்த முதல் 24 முதல் 48 மணி நேரத்துக்குள் இந்த சோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்தியாவில் இது மிகவும் முக்கியமானதாகும், ஏனெனில் பிறவி ஹைப்போ தைராய்டிசம் போன்ற கோளாறுகள் பரவலாக காணப்படுகின்றன. சிகிச்சையின்றி விட்டால் இது குழந்தையின் அறிவு வளர்ச்சியை பாதிக்கும். ஆனால் நாட்டில் இந்த பரிசோதனைக்கு உட்படுபவர்கள் எண்ணிக்கை 3% க்கும் குறைவாக இருக்கிறது.
குருகிராமத்தில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனை மருத்துவர் ஸ்ரேயா துபே, வளர்சிதை மாற்ற, மரபணு மற்றும் பிறவி குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு இந்த பரிசோதனைகள் அவசியம் என்கிறார். முக்கியமான சோதனைகளில் ஒன்று பீனில்கெட்டோனூரியா, இது கண்டறியப்படாவிட்டால், குழந்தை மீளமுடியாத அறிவுசார் பாதிப்பை சந்திக்கும். அதேபோல், ஹைப்போ தைராய்டிசமும் மூளை வளர்ச்சியைத் தடுக்கும்.
இதயக் குறைபாடுகளை கண்டறிய பல்ஸ் ஆக்சிமெட்ரி என்ற சோதனையை பயன்படுத்துகிறார்கள். இது எளிமையான, உடலை ஊடுருவாத முறையில் செய்யப்படும் ஒரு பரிசோதனை. வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல், குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கலாம். இந்த சோதனை அவற்றைக் கண்காணிக்க உதவுகிறது.
காது கேட்பதற்கான சோதனையும் பேச்சு மற்றும் மொழி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. இரத்த சோகை, தலசீமியா, மஞ்சள் காமாலை போன்ற கோளாறுகளும் ஆரம்ப பரிசோதனையால் கண்டறியப்படலாம். குறிப்பாக, சிகிச்சையின்றி விட்ட கடுமையான மஞ்சள் காமாலை மூளைச் சேதத்திற்கு வழிவகுக்கும்.
இத்தகைய பரிசோதனைகள் வலியற்றவையாகவும், விரைவானவையாகவும் உள்ளன. சில துளி இரத்த மாதிரி, இதயத்துடிப்பு, மற்றும் செவிப்புலன் அளவீடுகள் மட்டுமே இந்த பரிசோதனைக்கு தேவைப்படும். இது குழந்தையின் உடல்நலத்தை மேம்படுத்துவதுடன், மருத்துவ செலவுகளையும் குறைக்கும்.
இந்த பரிசோதனைகள் மருத்துவமனையிலிருந்து குழந்தை வெளியேறும் முன் செய்யப்படுவது அவசியம். மரபணு கோளாறுகளின் வரலாறுள்ள குடும்பங்களில் கூடுதல் சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம். பெற்றோர்கள், குழந்தையின் ஆரம்ப பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மருத்துவரிடம் தெளிவாக பேச வேண்டும்.
டாக்டர் ஸ்ரேயா துபே கூறுகையில், “இவை வலியற்ற சோதனைகள் தான். பெரும்பாலான நோய்கள் எந்த அறிகுறியையும் காண்பிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, இந்த பரிசோதனைகள் விருப்பமல்ல, அவசியம்” என்கிறார்.
ஒரு குழந்தை ஆரம்பத்திலேயே ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைத் தொடக்கத்தை பெறுவதற்கு, இந்த பரிசோதனைகள் முக்கிய அடித்தளமாக அமைகின்றன.