சென்னை: அதிக எடை மற்றும் இடுப்பில் சேரும் கொழுப்பு நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். உடல் எடையை குறைக்க ஜிம்மில் மணி கணக்கில் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்து டயட்டை பின்பற்றுகிறோம். ஆனால் இன்னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
உடல் எடையை யோகா பயிற்சி மூலம் குறைக்க முடியும். தொடர்ந்து யோகா செய்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். மேலும் ஆசனங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை மற்றும் மாலை என இருமுறை செய்ய முயற்சிக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் 15 நாட்களுக்குள் உங்களில் வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள். யோகா ஆசனங்களை செய்யும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சிறந்த முடிவுகளுக்கு ஒவ்வொரு ஆசனத்தையும் 5 முறை செய்யவும்.
புஜங்காசனம்
புஜங்காசனம் என்பது இரண்டு வார்த்தைகளால் ஆனது. புஜங் என்றால் பாம்பு என்றும் ஆசனம் என்றால் தோரணை என்றும் பொருள். இதை செய்யும் போது உடல் பாம்பு போல மாறும். எனவே இது கோப்ரா போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. புஜங்காசனம் செய்வதால் வயிற்று தசைகள் விரிவடையும். உடல் எடை மற்றும் தொப்பை குறைய உதவுகிறது.
முதலில் தரையை பார்த்து படுத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தோள்களுக்கு கீழே வைக்க வேண்டும். பாதங்களை ஒன்றாக வைக்க வேண்டும். இப்போது மூச்சை உள் இழுத்துக்கொண்டு பின்தலை, தோள்கள் இவர்றை 30 டிகிரி கோணத்தில் உயர்த்த வேண்டும். வயிற்றுப்பகுதி தரையில் இருப்பதையும், தோள்கள் அகலமாகவும், தலை சற்று உயர்த்தப்பட்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதன்பிறகு கால் விரல்களுக்கு அழுத்தம் கொடுங்கள். ஆசனத்தை 10 வினாடிகள் வைத்திருந்து பின்னர் மெதுவாக தலையை கீழே கொண்டு வந்து பிறகு மூச்சை வெளியே விட வேண்டும்.