சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவராக, இந்திய மக்களின் குரலாக விளங்கும் ராகுல் காந்தியை பார்த்து, நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பதவியேற்றது முதல் மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஆளுங்கட்சியின் கவனத்தை ஈர்த்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 3-வது முறையாக மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைத்து, கடந்த ஓராண்டாக நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று வன்முறை பூமியாக மாற்றிய மணிப்பூருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
மத்திய அரசின் துறைகளில் உள்ள உயர் பதவிகளுக்கான 45 பணியிடங்களை தேர்வு செய்து மத்திய அரசின் அமைப்பான மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை செயல்படுத்த விடாமல் தடுத்தார்.
அதேபோல், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றாமல் தடுத்து, நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதிலும் முக்கிய பங்காற்றினார்.
தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று 100-வது நாள் நிறைவு பெறுவதை தமிழக காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.