புதுடில்லி: டெல்லி ஆம் ஆத்மி அரசின் கீழ் வகுக்கப்பட்ட மதுதான் கலால் கொள்கைகளால் மாநிலத்திற்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
CAG என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களை தணிக்கை செய்யும் சட்டப்பூர்வ அமைப்பாகும். டெல்லி மதுபான கொள்கை குறித்த சிஏஜி அறிக்கை ஒன்று தற்போது கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் கீழ் வகுக்கப்பட்ட மதுபான கலால் கொள்கைகளால் மாநிலத்திற்கு 2,026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிராக இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.
கசிந்த அறிக்கையின் சில பகுதிகளின்படி, சரண்டர் செய்யப்பட்ட மதுபான உரிமங்களை மறு டெண்டர் விடாததால் ரூ.890 கோடியும், மண்டல உரிமதாரர்களுக்கு வழங்கப்பட்ட விலக்குகளால் ரூ.941 கோடியும் நஷ்டம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர், அமைச்சரவை மற்றும் சட்டசபையின் ஒப்புதல்களை அரசு புறக்கணித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
அதுமட்டுமின்றி, மணிஷ் சிசோடியா தலைமையிலான அமைச்சர்கள் குழு (GoM) நிபுணர் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில் தேர்தல் நேரத்தில் இந்த அறிக்கை கசிந்துள்ளதாக கூறப்படுவது அரசியலில் புயலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அறிக்கை பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ எதுவும் வெளியாகாத நிலையில் கசிந்துள்ளதாக கூறும் இந்த அறிக்கையை பாஜகவால் தர முடியுமா என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.