சண்டிகர்: ஆய்வறிக்கையில் வெளியான தகவல்… புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியானா எம்.எல்.ஏ.,க்களில் 96 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். 12 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது’ என ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பா.ஜ., 48 இடங்களில் வென்றது. காங்கிரஸ், 37 இடங்களில் வென்றது. இந்திய தேசிய லோக் தளம், இரண்டு இடங்களிலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வென்றனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஹரியானா எம்.எல்.ஏ.,க்கள் 90 பேரின் பிரமாணப் பத்திரத்தை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்தது. இது தொடர்பாக, ஏ.டி.ஆர்., அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஹரியானாவில் தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ள 90 பேரின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
90 பேரில் 86 எம்.எல்.ஏ.,க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 44 சதவீதம் பேர் ரூ.10 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர். 2.2 சதவீதம் பேர் மட்டுமே ரூ.20 லட்சத்துக்கும் குறைவான சொத்துக்களை வைத்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.24.97 கோடியாகும்.
63 சதவீதம் பேர் பட்டதாரிகள் அல்லது மேல் படிப்பு முடித்து பட்டம் பெற்றவர்கள். 29 சதவீதம் பேர் 8 முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வித் தகுதியை கொண்டுள்ளனர்.
ஜிண்டால் குழுமத்தின் தலைவரான ஹிசார் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., சாவித்ரி ஜிண்டால் ரூ.270 கோடி சொத்துகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2ம் இடத்தில் பா.ஜ.,வின் சக்தி ராணி சர்மா ரூ.145 கோடி சொத்துகளுடன் உள்ளார். 3ம் இடத்தில், ரூ.133 கோடி சொத்துக்களுடன் பா.ஜ.,வின் ஸ்ருதி சவுத்ரி உள்ளார். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.