தஞ்சாவூர்: திருவையாறு தொகுதி தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திருக்காட்டுப்பள்ளியில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் போட்டியிடுகிறார். அவர் திருவையாறு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன்படி திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமை தாங்கினார். பூதலூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு வரவேற்றார்.
கூட்டத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி. தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் உலகநாதன். முருகானந்தம். சிவசங்கரன், கவுதமன், அரசாபகரன், அசோக்குமார், பேரூர் செயலாளர்கள் நாகராஜன். அகமது மைதீன், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் லோகநாதன், தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு: கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ., மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழர் தேசிய கட்சி, விவசாய தொழிலாளர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திராவிட மாடல் அரசின் செயல் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். திருவையாறு சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் துரை.சந்திரசேகரன், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டி பேசினார். முடிவில் பேரூர் கழகச் செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்..