சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாகப் பெரும் தோல்வியைச் சந்தித்தன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னணி தலைவர்கள் கூறி வந்த நிலையில், அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணிக்கு ஒரு சில தலைவர்கள் ஆதரவு தெரிவித்தாலும் பெரும்பாலான தலைவர்கள், நிர்வாகிகள், அதிமுகவினர் ஏற்கவில்லை. இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் மே 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜக கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படும். அதிமுக எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று இரவு விருந்து அளித்ததாகவும் கூறப்படுகிறது. பாஜகவுடனான கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பை போக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி இரவு விருந்து அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க., தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில், வரும், நாளை மாலை, 4.30 மணிக்கு, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணி குறித்தும், அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜக கூட்டணிக்கு எதிராக எந்த ஆட்சேபனையும் எழக்கூடாது என்பதற்காக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து என அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருவதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிமுக-பாஜக கூட்டணிக்கு பிறகு நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.