சென்னை: தமிழக பாஜக தலைவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது வழக்கம். பொதுவாக யாரும் இரண்டு முறை தலைவராக நியமிக்கப்படுவதில்லை. அந்த வழக்கப்படி அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இதனால் அவரது பதவியை மீண்டும் நீட்டிப்பதா அல்லது புதிய தலைவரை நியமிப்பதா என்பது குறித்து டெல்லி மேலிடம் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில்தான் அண்ணாமலையை மாற்றினால் கூட்டணிக்கு தயார் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அண்ணாமலையை மாற்ற அமித்ஷா முடிவு செய்தார். இதற்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இறுதியாக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநில தலைவரை டெல்லி மேலிடம் முடிவு செய்தாலும், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். அந்த ஆலோசனையில் அவரை தலைவராக்கலாம் என பல்வேறு கருத்துக்கள் எழுந்தாலும், மேலிடத்தினர் தாங்கள் நினைத்தவரை மட்டுமே தலைவராக அறிவிப்பார்கள்.

அதன்படி பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகிறார். இதனால், மோடி வரும்போது மாநில தலைவரை மாற்றுவது நல்லதல்ல என அமித்ஷா கருதினார். இதன் காரணமாக அமித்ஷா உத்தரவுப்படி வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் சென்னையில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொள்கிறார். கூட்டம் முடிந்ததும், வரும் 9-ம் தேதி டெல்லியில் அறிக்கை தாக்கல் செய்கிறார்.
ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 9-ம் தேதி புதிய மாநில தலைவர் அறிவிப்பு வெளியாகும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக மாநில தலைவரின் அறிவிப்புடன் மேலும் 13 மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்த வரையில் புதிய மாநில தலைவராக நைனார் நாகேந்திரன் நியமிக்கப்படுவார் என்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே இந்த மாற்றம் என்றும் கூறப்படுகிறது. மாநில தலைவர் மாற்றம் நடந்தவுடன் கூட்டணி குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.