சென்னை; தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வரும் 25ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தொடங்குகிறார். இதில் முதற்கட்ட பயண விவரம் வெளியிடப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வரும் 25-ஆம் நாள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசின் பிறந்த நாளான ஜூலை 25-ஆம் நாள் மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து நவம்பர் 1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.