சென்னை: தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலையில் சர்வதேச அரசியலை ஆய்வு செய்வதற்காக விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் கட்சியினர் அவரை உற்சாகப்படுத்தினர்.
பா.ஜ.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை வரும் 1-ம் தேதி துவங்க உள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சி தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வந்தார்.
கடந்த 25-ம் தேதி சென்னையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அண்ணாமலை பேசியது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக லண்டன் சென்று சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்கான பணியை அண்ணாமலை மேற்கொண்டு வந்தார். இதற்காக பா.ஜ.க. தலைமையிடம் அனுமதியும் பெற்றார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று காலை அண்ணாமலை விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன், மீனவர் அணித் தலைவர் முனுசாமி, விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜன், அமைப்பு சாரா தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சாய்.சத்யன், காளிதாஸ் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 4 மாதங்கள் படிக்கும் அண்ணாமலை, அங்கிருந்தே கட்சி நிகழ்ச்சிகளை கவனிப்பார். படிப்பை முடித்துவிட்டு டிசம்பர் இறுதிக்குள் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.
இந்த 4 மாதங்களுக்கு கட்சியை தேசிய பொறுப்பாளர்கள் வழிநடத்துவார்கள். இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.