செங்கல்பட்டு: ஒரே மேடையில் அண்ணாமலை, சீமான்… செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் கலந்து கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்திருந்தார். நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவரை, நேற்று முன்தினம் இரவு நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகிய நிலையில் அந்த தகவலில் உண்மை இல்லை என சீமான் மறுத்தார்.
தனியாக போட்டியிடுவதாக கூறி நாங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறோம். சந்தித்திருந்தால், சந்தித்தேன் என நேரடியாக சொல்வேன் என சீமான் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் உள்ள தமிழ் பேராயகம் சார்பில், மாநில அளவிலான மாபெரும் பேச்சு போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் பேச்சுத்திறனை அறியும் விதத்தில் 9 மண்டலங்களாக பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. அதன் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்ளது
எஸ்.ஆர். எம் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சீமான் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்பதைவிட போர்க்களத்தில் நிற்கக் கூடிய தளபதியாக பார்க்கிறேன். சீமான் தான் எடுத்துக் கொண்ட கொள்கையில் நிலையாக நிலைத்து நிற்கிறார். எனக்கும் சீமானுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். சீமான் தமிழில் தேசியத்தை பார்க்கிறார் என்றார்