
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் 3 மாத முதுகலை படிப்பை மேற்கொள்வதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவருக்குப் பதிலாக தமிழக பாஜகவை வழிநடத்த மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு செயல்பட்டு வருகிறது.
லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அண்ணாமலை, தமிழக அரசியல் மற்றும் பிற நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். நவ., 28-ல் அவர் திரும்புவதாக இருந்தது, ஆனால் அவரது பயண திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, டிச., 1-ம் தேதி அதிகாலை, சென்னை திரும்புவார் என, தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், அன்றைய தினம், கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில், அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என, தெரிகிறது. டிச., 1-ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்னை திரும்பும் அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க, பா.ஜ., நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து, 2-ம் தேதி, தியாகராய நகரில் உள்ள, தமிழக பா.ஜ.க., தலைமை அலுவலகத்தில், அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 மாத இடைவெளிக்குப் பிறகு தமிழகம் திரும்பும் அண்ணாமலையின் அடுத்தடுத்த நகர்வுகளால் வரும் நாட்களில் அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.