புதுடெல்லி: அசாம் முதல்வர் மனைவிக்கு 3 பாஸ்போர்ட் விவகாரம் பவன்கேரா வீட்டில் அசாம் போலீசார் சோதனை
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மனைவி 3 நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும், வெளிநாடுகளில் சொத்து வைத்து இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் பவன்கேரா குற்றம் சாட்டியது அசாம் சட்டப்பேரவை தேர்தலில் அனலை ஏற்படுத்தியது. இதையடுத்து பவன்கேரா மீது அசாம் முதல்வர் மனைவி புகார் அளித்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள பவன்கேரா இல்லத்திற்கு நேற்று அசாம் மற்றும் டெல்லி போலீசார் சோதனையிட சென்றனர்.
அதற்கு முன்பு பவன்கேரா, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றுவிட்டார். பவன்கேரா இல்லத்தில் சோதனை நடத்திய பிறகு அங்கு குற்றத்தில் தொடர்புடைய மின்னணு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அசாம் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப் பயன்படுத்திய ஆவணங்களை சரிபார்க்காததற்காக காங்கிரசை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடுமையாகச் சாடினார்.
முதுமையின் காரணமாக கார்கே பைத்தியக்காரனைப் போலப் பேசுவதாக விமர்சித்தார். மேலும் பவன் கேரா பயந்து போய் ஐதராபாத்திற்கு ஓடிவிட்டதாகக் குறிப்பிட்ட முதல்வர், அசாம் காவல்துறை அவரை பாதாள உலகத்திலிருந்து கூடத் தேடிப் பிடித்துக் கொண்டு வரும் என்றார்.இதற்கிடையே ரினிகி புயான் சர்மாவின் 3 நாடுகளின் பாஸ்போர்ட் போலியானது என்று மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் பவித்ரா மார்கரிட்டா தெரிவித்தார்.