டெல்லி வந்துள்ள அண்ணாமலை, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தமிழக அரசு அதிகாரிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மத்திய அரசின் பார்வையில் தமிழகத்தில் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இதன் மூலம் 100 சதவீதம் மாநில பேரிடர் நிவாரண நிதி தமிழகத்தில் முழுமையாக பயன்படுத்தப்படும்.
ஆளுங்கட்சியில் 40 எம்.பி.க்கள் இருந்தாலும், தமிழக மக்களுக்காக பாஜக தலைவர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றனர். திமுக பிரச்சனையை உருவாக்குகிறது. அதற்கான தீர்வை பாஜக அளித்து வருகிறது. உதாரணமாக டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு தான் காரணம். டங்ஸ்டன் வேண்டாம் என்று மாநில அரசுக்கு பல வாய்ப்புகள் இருந்தும், தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்து பிரச்சனையாக மாறிய பிறகுதான் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தமிழக அரசு வேண்டாம் என்று கூறியது.
இதற்கு தமிழக பா.ஜ.கவும் தீர்வை வழங்கியுள்ளது. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனையும் சந்தித்து இது தொடர்பாக விவாதித்தேன். விரைவில் நல்ல முடிவு வரும். தி.மு.க.வுக்கு இத்தனை எம்.பி.க்கள் இருந்தும் அவர்களை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். டங்ஸ்டன் பிரச்னையை மாநில அரசு சிறப்பாகக் கையாண்டிருக்க வேண்டும்.
திமுக அரசு போட்டி மனப்பான்மையுடன் மட்டுமே செயல்படுகிறது. மாநில அரசு பல விஷயங்களை சரியாக கையாளவில்லை. மத்திய அரசின் பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு வருகின்றன. எந்த பிரச்சனையும் இல்லாமல் சரி செய்வது அவர்களின் கடமை. மாநில அரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும். தமிழகம் பல லட்சம் கோடி முதலீடுகளை பெற வேண்டுமானால், தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.