புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தல் இம்மாதம் நிறைவடைந்ததும் புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இந்தத் தேர்தலை கடந்த ஜனவரி மாதம் நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநில அமைப்புகளுக்கான தேர்தல் நிலுவையில் உள்ளதால் அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், குறைந்தபட்சம் 50% மாநில அமைப்புகள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போது 36 மாநிலங்களில் 12 மாநிலங்களில் மட்டுமே தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எனவே, தேசிய தலைவர் தேர்தலுக்கு இன்னும் 6 மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இந்த தேர்தலை பீகார், உ.பி., ம.பி., கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் 7 முதல் 10 நாட்களுக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு பாஜக புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ஜூன் 2019 முதல் தற்காலிக தலைவராக பணியாற்றிய பின்னர், ஜனவரி 2020 முதல் கட்சியை வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில் பாஜக 35 மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட்டு 16 இடங்களில் வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.