மதுரை: மதுரை எம்.பி சு. வெங்கடேசன் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூறியிருப்பதாவது:- 2025-ம் ஆண்டுக்கான மாதாந்திர நாட்காட்டி உங்கள் கடிதத்துடன் லோக்சபா செயலகத்தில் இருந்து எங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்திய அரசியலமைப்பு வரலாற்றின் பயணத்தை நினைவுபடுத்தும் இந்த நாட்காட்டியில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் படங்கள் இல்லை. இந்த இருபெரும் ஆளுமைகளின் பங்களிப்பை மறைக்க மத்திய அரசு தினமும் முயற்சி செய்து வருகிறது.
பார்லிமென்ட் கட்டிடத்தின் முன்புறம் இருந்த காந்தி, அம்பேத்கர் சிலைகளையும் அகற்றிவிட்டு, பார்லிமென்ட் கட்டிடத்தின் பின்பகுதிக்கு மாற்றியுள்ளீர்கள். இப்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் அடையாளமாக, இரண்டு பெரிய தலைவர்களின் படங்கள் அல்லது பெயர்கள் இல்லாமல், சிறப்பு மாதாந்திர நாட்காட்டியை வெளியிட்டுள்ளீர்கள்.
இது திட்டமிட்டு வரலாற்றை திரித்து எழுதும் செயல். நவீன இந்தியாவை உருவாக்குவதில் இந்த இருபெரும் தலைவர்களும் ஆற்றிய பெரும் பங்களிப்பை அவமதிக்கும் செயலாகும். ஏற்கனவே, அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. இப்போது, இந்த காலண்டர் மக்களின் உணர்வுகளை மேலும் புண்படுத்தும். இது மக்கள் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தும். எனவே, காலண்டரை திரும்பப் பெற்று, காந்தி, அம்பேத்கர் ஆகிய இரு ஆளுமைகளுக்கும் உரிய இடம் அளிக்கும் வகையில் புதிய காலண்டரை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.