அமராவதி: மக்களின் அன்றாட பிரச்னைகளை புரிந்து கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கட்சி எம்எல்ஏக்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுரை வழங்கினார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனுகு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், 41 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (மார்ச் 15) முதன் முதலாக சட்டசபைக்கு அடியெடுத்து வைத்தேன். எங்கு சென்றாலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் அந்த தொகுதி பிரச்னைகள் குறித்து கேட்டறிவேன். எம்எல்ஏக்களும் இதை பின்பற்றி மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஸ்திரமான நிலையில் உள்ளது.

கட்சியை ஒழுங்கமைத்து, மக்களின் பிரச்னைகளை திறம்பட கையாள வேண்டும். “சூப்பர் சிக்ஸ் திட்டங்களில் சிலவற்றை செயல்படுத்தியுள்ளோம். மீதமுள்ள திட்டங்களை மத்திய அரசின் உதவியுடன் கண்டிப்பாக செயல்படுத்துவோம். கட்சி உறுப்பினர் அட்டையை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வருகிறோம். தற்போது தெலுங்கு தேசம் கட்சியில் 1.2 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர்,” என்றார்.